ஒரு தலைக் காதல்: கேரளா மாணவியை கொளுத்தி தானும் இறந்த மாணவர்

கேரளாவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்த மாணவர் ஒருவர் அந்த பெண் காதலிக்க மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தானும் இறந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

65 சதவீத தீக்காயங்களுடன் இருந்த பெண்ணும், ஆதர்ஷ் என்ற அந்தஅதே கல்லூரியில் படித்து, படிப்பை முடிக்காத மற்றொரு மாணவரும் நேற்று இரவு கோட்டயம் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'' ஆறு மாதங்களாக அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் அந்த பெண் நட்பைத் தொடர மறுத்துள்ளார். ஆனால் ஆதர்ஷ் அவரை பின் தொடர்ந்துள்ளார்,'' என்றார் எட்டுமானூர் காவல் துறை ஆய்வாளர் சி ஜே மார்ட்டின்.

அந்த பெண் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள கன்யாகுளம் காவல் நிலையத்தில் ஆதர்ஷ் தன்னை தனது விருப்பத்திற்கு மாறாகப் பின் தொடர்ந்தார் என்று புகார் அளித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

''ஆதர்ஷ் பின் தொடர்வது குறித்து புகாரை அடுத்து, காவல் துறையினர் இருவரையும், அவர்களது பெற்றோர்களையும் அழைத்துப் பேசினார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த சந்திப்பு நடந்தது. ஆதர்ஷ் இனிமேல் பின் தொடரமாட்டேன் என எழுதியும் கொடுத்தார்,'' என்றார் ஆலப்புழையில் உள்ள சிங்கோலி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் எச்.நியாஸ் .

''ஆதர்ஷ் பெட்ரோல் கேனை எடுத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் மீது ஊற்றி தானும் பற்ற வைத்துக்கொண்டார்,'' என்றார் நியாஸ்.

''சம்பவம் நடந்த இடத்தில் நான் இல்லை. ஆதர்ஷ் வகுப்பறைக்கு வந்து அந்த மாணவியை அழைத்ததாக எனது நபர்கள் கூறினார்கள். அவர் வெளியே வர மறுத்துள்ளார். மீண்டும் ஆதர்ஷ் வந்ததும், அந்த மாணவி வெளியே ஓடிச் சென்று, நூலகத்திற்குள் நுழைந்தார். அங்கு தான் ஆதர்ஷ் பெட்ரோலை ஊற்றி, பற்ற வைத்துள்ளார்,'' என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மாணவர்.

ஆதர்ஷ் தனது படிப்பை முடிக்காமல் இருந்ததால்தான் அவர் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இது போன்ற பெண்களை ஆண்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாக தொடர்ந்து செல்லும் சம்பவங்கள் கேரளாவில் நடைபெறுகின்றன.

ஆனால் பெண்கள் தயங்குவதால் உடனடியாக அவை அனைத்தும் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பெண் சிரமப்படும் போது தான் அவர் புகார் செய்கிறார். ஆனால் காவல் துறை அதிகாரிகள் சமாதானம் செய்யும் வேலையைத்தான் செய்கிறார்கள். அதுவும் பயனற்று போகும் போது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது, '' என்கிறார் அன்வேஷி என்ற பெண்கள் குழுவை சேர்ந்த அஜிதா.