விஷால் மீதான தடையை நீக்கியது திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் மீது விதிக்கப்பட்டிருந்த இடை நீக்க உத்தரவை தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு ரத்து செய்தது.

Image caption அவ்வாறு பேட்டி கொடுத்தது தவறுதான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் : விஷால்

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான திரைப்பட சங்கங்களில் ஒன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் அவருடைய சொந்த பட நிறுவனத்தின் தயாரிப்பாளராக உறுப்பினராக இருந்தார்.

ஒரு வாரப் பத்திரிகைக்கு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி விமர்சித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதியிலிருந்து தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்தனர்.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

தன்னை நீக்கியது தவறு என்றும், இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

'மன்னிப்பு கேட்கிறேன்'

விசாரணை துவங்கிய பிறகு, தான் அவ்வாறு பேட்டி கொடுத்தது தவறுதான், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மன்னிப்பை தயாரிப்பாளர் சங்கம் ஏற்க மறுத்தது. விசாரணையின் முடிவில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி கே. கல்யாணசுந்தரம்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல் முறையீடு செய்தார். அவருடைய முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர்  தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை சங்கத்தினர் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவரை உடனே தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லை எனில் நீதிமன்றமே அதற்கு உத்தரவிடும் என்று கூறி இன்று காலை வரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவகாசம் கொடுத்து உத்தரவிட்டனர்.

இடைநீக்க உத்தரவை ரத்து செய்து தீர்மானம்

இதற்கிடையில், நேற்று வியாழன் மாலை கூடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில் விஷால் மன்னிப்பு கோரியதன் அடிப்படையில் அவரது இடைநீக்கம் மீதான உத்தரவை ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இதையடுத்து விஷால் மீதான இடைநீக்கம் ரத்தாகி அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக இணைய உள்ளார்.

விஷால் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் இணைவதால் மார்ச் மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவிக்கு போட்டியிட உள்ளார் என அவரது தரப்பில் தெரிவிக்கிறார்கள். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்