பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ; கரை சேரப்போவது யார் ?

வட இந்திய மாநிலமான பஞ்சாபில் பிப்ரவரி 4-ம் தேதி (சனிக்கிழமை) 117 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்சில இடங்களை தவிர்த்து மற்ற பெரும்பாலான இடங்களில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் ?

ஒட்டுமொத்தமாக 1,145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 81 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர். சுமார் 1.98 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் மாநிலத்தில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில், பஞ்சாபில் வேறு அரசியல் குழு அல்லது கூட்டணி இல்லாத காரணத்தால், போட்டியானது, பா.ஜ.க, ஷிரோமணி அகாலி தல் கூட்டணி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நிலவி வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இந்த முறை, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக கால் பதிக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இது போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

போதைமருந்துமுக்கிய அரசியல் பிரச்சனை

பிரதமர் நரேந்திர மோதி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற மூத்த தலைவர்களின் பிரச்சாரங்கள் மற்றும் சாலை பேரணிகள் என பரபரப்பான பிரச்சாரமானது கண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மோசமான போதைமருந்து பழக்க அபாயம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியன இம்முறை பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய அரசியல் பிரச்சனைகளாக ஆளும் கூட்டணி ஆட்சிக்கு உருவெடுத்துள்ள நிலையில், அதனை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

இளைஞர்களை மெல்ல மெல்ல கொன்றுவரும் செயற்கை போதை மருந்து பிரச்சனையை உறுதியாக தடுக்கப் போவதாக அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதியளித்துள்ளன.

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

பசுமை புரட்சியின் மண்ணாக அறியப்படும் பஞ்சாபில் உள்ள விவசாயிகளின் பிரச்சனை தற்போது இந்நேரத்தில் மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பொய்த்துப்போன விளைச்சலுக்கு விவசாயிகள் நஷ்ட ஈடு எதிர்பார்க்கின்றனர். மேலும், கடுமையான கடன் சுமையை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் உறுதியளித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

லம்பி, லெஹ்ரா, ஜலாலாபாத் தொகுதி நிலவரம்

எல்லா கண்களும் லம்பி சட்டமன்ற தொகுதி மீது குவிந்திருக்கின்றன. காரணம், முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான கேப்டன் அம்ரிந்தர் சிங் மற்றும் தற்போதைய முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் இருவரும் ஒரே தொகுதியில் களம் காண்பதால் பிரகாஷ் சிங் பாதலுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகிறார் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங். இந்த தொகுதி மட்டுமின்றி கூடுதலாக பாட்டியலா சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார் அம்ரிந்தர் சிங். அங்கு முன்னாள் ராணுவ தளபதி ஜெ.ஜெ.சிங் அகாலி தளம் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

லெஹ்ரா சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ராஜிந்தர் கெளர் பட்டல் மற்றும் மாநிலத்தின் நிதித்துறை அமைச்சரும், அகாலி தள வேட்பாளருமான பர்மிந்தர் சிங் திண்ட்சா ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

எனினும், ஆம் ஆத்மி கட்சியானது, தில்லி சட்டமன்ற உறுப்பினரான ஜர்நெய்ல் சிங்கை பாதல் மற்றும் அம்ரிந்தர் சிங் ஆகிய இருவருக்கும் எதிராக நிறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜலாலாபாத் சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள இரு உறுப்பினர்களை எதிர்த்து களம் காணுவதால் மேலும் சுவாரஸ்யம் கூடியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சி களத்தில் நிறுத்த, முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவ்நீத் சிங் பிட்டுவை காங்கிரஸ் ஜலாலாபாத்தில் நிறுத்தியுள்ளது.

ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வெற்றியை தருமா?

ஆளுங்கட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், ஒப்பீட்டளவில் பஞ்சாப் அரசியலுக்கு ஆம் ஆத்மி கட்சியானது புதிய வரவாகும். ஆனால், மாநிலத்தின் உட்பகுதிகளில் தனது ஆதரவைப் பெருக்கியுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க மற்றும் அகாலி தள கூட்டணி மற்றும் காங்கிரஸை அமர வைக்க விருப்பமில்லாதாவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியானது புதிய மாற்று அரசியலை வழங்கும் என்று பஞ்சாபில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உலகிலிருந்து பல பகுதிகளில் வந்துள்ள வெளிநாட்டு இந்தியர்களின் ஆதரவை அக்கட்சியால் திரட்ட முடிந்துள்ளது. 117 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் உள்ளூர் அரசியல் கட்சியான லோக் இன்சாஃப் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஆம் ஆத்மி மற்ற 112 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவருடைய மனைவி நவ்ஜோத் கெளர் சித்து ஆகியோரை சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்குமுன் காங்கிரஸ் இணைத்து கொண்டது.

பஞ்சாபில் தற்போதுள்ள சூழலில் வாக்காளர்கள் இம்முறை தங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி அதிகமாக நம்பி வருகிறது. மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்குமுன் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவருடைய மனைவி நவ்ஜோத் கெளர் சித்து ஆகியோரை காங்கிரஸ் இணைத்து கொண்டது. இந்த தம்பதிகள் இதற்குமுன் பா.ஜ.கவில் இருந்தனர். மாநிலத்தில் மொத்த 117 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்