தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலிசார் புகாரை மாற்றி எழுத சொன்னதாக சர்ச்சை

அரியலூர் மாவட்டத்தில் ஒரு தலித் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்கில், முதலில் புகார் அளிக்க வந்த சிறுமியின் தாயிடம் காவல் துறையினர் புகாரை மாற்றி எழுதித் தருமாறு கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)

16 வயதான அந்த சிறுமிக்கு நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு வார காலமாக ஊர் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் இறந்த சிறுமியின் தாய் அளித்துள்ள புகாரில், ''இந்து முன்னணி கட்சியை சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் எனது மகளை கடத்தியாக புகார் அளிக்க வேண்டும் என்று இருபுலிக்குறிச்சி காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் கூறியபோது,அதற்கு பதிலாக, எனது மகளை காணவில்லை என்று மட்டும் புகார் கொடுக்க சொன்னார்கள்,'' என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை RASAKILI
Image caption நந்தினியின் தாய் ராசக்கிளி அளித்துள்ள புகாரில் காவல் துறையினர் புகாரை கடத்தல் வழக்காக பதிவு செய்ய மறுத்தது குறிப்பிட்டுள்ளது

பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இ.சரவணவேல்ராஜ், 'சிறுமியின் தாயால் அளிக்கப்பட்ட முதல் கடத்தல் புகாரை காவல் துறையினர் சிறுமியை காணவில்லை என்று மாற்றிக் கொடுக்க சொன்னது உண்மைதான்,'' என்றார்.

மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், ''மணிகண்டனுக்கு, சிறுமிக்கும் தொடர்பு இருந்ததும், அந்த சிறுமி இறப்பதற்கு முன்பு கர்பிணியாக இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்கூறு பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அதனால்அந்தச் சிறுமியை, மணிகண்டன் அவரது நண்பகர்ளுடன் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தததாவும், சிறுமியின் பிறப்புறுப்பை சிதைத்து, கருவை கலைத்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை தற்போது வரை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்த முடியாது, '' என்றார் அவர்.

இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலர் பி.சுகந்தி , டிசம்பர் 26ம் தேதி காணாமல் போன சிறுமியின் உடல், கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டது என்று தெரிவித்தார்

படத்தின் காப்புரிமை GAVASKAR
Image caption கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன்

''சிறுமி காணாமல் போன 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது . 20 நாட்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவுசெய்தனர். காவல் துறையினரின் அலட்சியத்தால்அச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டதாக கூறுகிறார் எவிடென்ஸ் தன்னவர்வ அமைப்பை சேர்ந்த செயற்பாட்டாளர் கதிர். ''குழந்தை மற்றும் ஒரு தலித் இனத்தை சேர்ந்த ஒரு பெண் குழந்தை குறித்த புகாரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற புரிதல் காவல் துறையினருக்கு இல்லை. புகாரை மாற்றி எழுதச் சொன்னது மட்டுமல்லாமல், சிறுமியை, அவரது குடும்பத்தை அவமானப்படுத்தும் விதமாக காவல் துறையினர் நடந்துகொண்டுள்ளனர். இது போன்ற சம்பவங்களால் புகாரை பின்வாங்க வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான நடைமுறை,'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் தலித் பெண்களுக்கு நடக்கும் 100 சதவீத பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே வழக்காக பதிவாகிறது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய கணக்கெடுப்பை சுட்டிக்காட்டிய கதிர், ''புகார்கள் பதிவு செய்ய பெற்றோர் முன்வரும் போது, காவல் துறையினர் அதை ஏன் தடுக்க வேண்டும். நாங்கள் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செய்த ஆய்வில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 115 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனாள் வழக்கு நடத்தப்படவில்லை, '' என்றார்.

காவல் துறையினர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்பதற்காக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த குமார் கிரியை தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்த போதும் பதில் கிடைக்கவில்லை.