ஜெயலலிதா மரணம் தொடர்பாக மெளனம் ஏன்? பிரதமர் மீது நடிகை கெளதமி அதிருப்தி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பிரதமர் மோதிக்கு நேரடியாக எழுதப்பட்ட கடிதம் அவருக்கும், அவருடைய அலுவலகத்தின் பார்வைக்கும் வராமல் போனது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நடிகை கெளதமி டாடிமாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption மெளனத்துக்கு என்ன அர்த்தம்? (கோப்புப்படம்)

கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருடைய மரணத்தில் மொத்த தகவல்களும் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறும் நடிகை கெளதமி பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் செய்தி : முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் : பிரதமர் மோதிக்கு, கெளதமி மனு

இச்சூழலில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோதியிடமிருந்து எவ்வித விளக்கமும் கெளதமிக்கு கிடைக்காததால் ஓர் அறிக்கையின் மூலம் தன்னுடைய அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார்.

அதில், தேசிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடும் சீற்றத்தை ஏற்படுத்திய ஒரு விவரம் குறித்து பிரதமர் மோதிக்கு எழுதிய கடிதமானது அவருக்கும், அவருடைய அலுவலகத்தின் பார்வைக்கும் படாமல் போனது என்பது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்மையாக தோன்றுவதாகவும், தன்னுடைய நாட்டு மக்களுக்கு செவி சாய்ப்பேன் என்று உறுதியளித்த தலைவருக்கு குடிமகனின் நியாயமான கோரிக்கைக்கு சென்றடையாமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தை நான் எழுதிய போது பிரதமர் மீதான நம்பிக்கை என்பது உறுதியாக இருந்தது என்றும், தமிழகம் என்பதால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வரின் மறைவை தொடர்ந்து வர்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மற்றும் விவசாயிகளின் தற்கொலை என்று தொடர் பெரும் நிகழ்வுகளை சந்தித்த போதும் மத்திய அரசிடமிருந்து அர்த்தமுள்ள பதில் கிடைக்கும் என்று தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் உங்களுடைய இந்த உறுதியான மவுனத்திற்கு பின்னால் என்ன உள்ளார்ந்த செய்தி உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள கெளதமி, இந்த நாட்டின் குடிமக்களுக்கு முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெரிந்துகொள்ளும் முழு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்