முதலமைச்சராக ஒப்புக்கொண்டது ஏன்? - சசிகலா விளக்கம்

"கட்சியின் பொதுச் செயலராகவும் தமிழக முதலமைச்சராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வந்ததன் விளைவாக, உங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் நான் ஏற்கிறேன்," என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption தேர்வு மேடையில்

கட்சித் தலைமைமையகத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, ஏற்புரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஜெயலலிதா மறைந்த உடனே, கட்சியின் பொதுச் செயலராகவும், முதலமைச்சராகவும் நானே பொறுப்பேற்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் முதன் முதலில் வலியுறுத்தினார். ஆனால், அப்போது எதையும் ஏற்கும் மன நிலையில் நான் இல்லை," என்றார் சசிகலா.

"அதிமுகவினர் தொடர்ந்து என்னைச் சந்தித்து கோரிக்கை வைத்ததால் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றேன். அதேபோல், இப்போதும், கட்சியின் பொதுச் செயலராகவும், முதலமைச்சராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்ற உங்கள் அனைவரின் கோரிக்கையையும் நான் ஏற்கிறேன்," என்றார் சசிகலா

"ஜெயலலிதா அவர்களின் கனவை முழுமையாக நிறைவேற்றுவேன். மக்களுக்காக இந்த ஆட்சி செயல்படும்," என்று சசிகலா உறுதியளித்தார்.

கட்சிக்கு சோதனை வந்த போதெல்லாம், ஜெயலலிதா அவர்கள் முதல்வராகத் தொடர முடியாத போதெல்லாம், கட்சித் தலைமைக்கு விசுவாமாகத் திகழ்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் விரிசல் வராதா என்று கனவு கண்ட அரசியல் எதிரிகளின் எதிர்பார்ப்புகளைப் பொடிப்பொடியாக்கிய நிர்வாகிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்