`ஜெயலலிதாவின் சிகிச்சை ரகசியங்களை வெளியிடுவாரா சசிகலா?'

தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெறுவதைவிட, அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறுவதே சசிகலாவின் முதல் சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர் ஞாநி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை சசிகலா பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் ஞாநி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க தயாராகிவிட்ட நிலையில், அவரது இந்த நியமனம், எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று தெரிவித்தார். ஏற்கெனவே கட்சி அவரது பிடியில் இருந்து வந்த நிலையில், ஆட்சியும் மறைமுகமாக இருந்து வந்தது. நேரடியாக இரண்டையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஞாநி சுட்டிக்காட்டினார்.

பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஆகிய இரண்டு பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தியதால்தான், முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்க முன்வந்ததாக சசிகலா கூறியிருப்பது ஒரு சமாதானம்தான் என்று குறிப்பிட்ட ஞாநி, அப்படியென்றால், ஓ. பன்னீர் செல்வத்தையே கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக்கியிருக்கலாமே என்று கருத்துத் தெரிவித்தார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், ஆட்சியில் மறைமுகமாக ஆளுமை செலுத்துவார் என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்ட ஞாநி, அவர் மட்டும்தான் ஆளுமை செலுத்துவாரா அல்லது குடும்பத்தில் உள்ள பலர் ஆளுமை செலுத்துவார்களா என்பதைப் போகப் போகத்தான் பார்க்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா முடிவுக்கு மாறாக...

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கம், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட கட்சியினருக்கு முக்கியத்துவம் என சசிகலா எடுக்கும் நடவடிக்கை, தான் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, முக்கியப் பதவிகளில் தனக்கு இணக்கமானவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளது என்றார் ஞாநி.

Image caption ஞாநி

"தற்போது, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதை விட, அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறுவதே அவரது முதல் சவாலாக இருக்கும். பெரும்பான்மையான தொண்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. அதைப் பெற வேண்டுமானால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தரப்பட்டது? ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? எவ்வாறு அவர் கவனித்துக் கொள்ளப்பட்டார் என்பதை எல்லாம் சசிகலா பகிரங்கமாக வெளியிடவில்லை. அவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி, தன் மீது எந்தக் குற்றத்துக்கும் வாய்ப்பில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போது, அதிமுக தொண்டர்களுக்கும்அவர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையின்மை குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது," என்று ஞாநி கருத்துத் தெரிவித்தார்.

சசிகலாவின் முன் உள்ள மூன்று முக்கிய சவால்கள் என்று எடுத்துக் கொண்டால், அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுப்பது, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய பாரதீய ஜனதா ஆட்சியோடு இணக்கமாக இருந்து கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்பவைதான் அவருக்கு முக்கிய சவால்களாக இருக்கும் என்று ஞாநி தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்