ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒரு வாரத்தில் வரும் - உச்சநீதிமன்றம்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்கப்படலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Image caption தீர்ப்பு அடுத்த வாரம்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா முதன்முறையாகப் பதவிவகித்த 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்ததாக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹாவால் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நால்வருக்கும் நான்காண்டுகால சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மீதமுள்ள மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் சிறைக்கு அனுப்பப்பட்டதோடு, முதல்வர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.

இதனை எதிர்த்து, நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். 2015 மே 11ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்திடம் நினைவுபடுத்தினார். இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ், ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்று கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இந்தத் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்று (05.02.2017) சசிகலா ஆளும்கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். அவர் விரைவில் முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.