கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார்கள்: ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஓ. பன்னீர் செல்வம் அதிரடியாக புகார் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் தனது ராஜிநாமாவை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று 40 நிமிடம் தியானம் செய்த அவர், அதன் பிறகு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம்: சென்னையில் பரபரப்பு

ஆளுநரின் சென்னை பயணம் தாமதம் ஏன்?

ஜெயலலிதாவுக்கு விஷம் வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறவில்லை: அ.தி.மு.க.

முதலில் ஜெயலலிதாவுக்குப் பதிலாக, மதுசூதனனை பொதுச் செயலராக்கவேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் மறுத்தேன். பின்னர் சில காலத்துக்குப் பின் சசிகலாவை பொதுச்செயலராக்கவேண்டும் என்றனர். அதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் பின்னர் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் போராடி ஜனாதிபதி ஒப்புதலோடு அவசர சட்டம் இயற்றப்பட்டது. மாணவர்கள் நிரந்தர சட்டம் கோரினார்கள். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையோடு தொடங்கியது. ஆனால் முன்னேபோதும் இல்லாத நிலையில், அவசர சட்டத்துக்கு சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

நான் ஒரு பக்கம் நாட்டின் பிரதமரைப் பார்க்க செல்கின்றேன். இன்னொரு பக்கம் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமரைப் பார்க்க நேரம் கேட்டார். மன உளைச்சலை நான் கட்சித் தலைமையிடம் சொன்ன போது, எனக்கு பரிகாரம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நிகழ்வாக, சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுத்து அதனடிப்படையில் என்னைமுதலமைச்சராக தேர்ந்தெடுத்து என் பணியை நான் செய்துவந்த நேரத்தில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சின்னம்மாதான் முதலமைச்சராகவேண்டும் என்று பேட்டி தருகிறார். இதை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றேன். என் அமைச்சரவையில் இருக்கும் ஒருவரே இவ்வாறு பேட்டி கொடுத்தால் அது நீதிக்கும் நியாயத்துக்கு சரிதானா என்று கேட்டேன். ஆர்.பி.உதயகுமாரை கண்டித்துவிட்டோம் என்று சொன்னார்கள். ஆர்.வி. உதயகுமாரை என்னிடம் விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை சென்று தானும் சசிகலாவைதைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று பேசினார். செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்துகிறார் என்று பன்னீர் செல்வம் பல தகவல்களை வெளியிட்டார்.

சில சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, நானே கருத்து வேற்றுமையை ஏன் இப்படி வெளிப்படுத்துகிறார்கள்என்று கேட்டேன்.

என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள் இது தேவைதானா என்று கேட்டேன்.

படத்தின் காப்புரிமை TV grab
Image caption ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம்

ஒட்டு மொத்த மக்களும், தொண்டர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினேன் என்றார்.

எம்.எல்.ஏ. கூட்டம் பற்றி தகவல் இல்லை

இந்த சூழ்நிலையில்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டது. அதுபற்றி எனக்குத் தகவல் இல்லை.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

கப்பல் மோதலால் ஏற்பட்ட மாசு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அதிகாரிகளுக்குக் கட்டளையிட்ட பிறகு போயஸ் தோட்டத்துக்கு சென்றேன். அங்கு மூத்த நிர்வாகிகள், பொதுச்செயலர் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் அமர்ந்திருந்தார்கள்

சசிகலாவைத்தான் முதலமைச்சராக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது என்று கேட்டேன்

அவர்கள் சட்ட்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியிருக்கிறது. இரண்டு பதவிகளையும் தரவேண்டும் நீங்கள்தான் அதைச் செய்ய வேண்டும் என்றார்கள்

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. பொதுச் செயலாளர்தான் முதல்வர் பதவியையும் வகிக்க வேண்டும். நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். கூட்டம் நடப்பதே எனக்குத் தெரியாது என்று சொன்னேன். எனது கையைப்பிடித்துக் கொண்டு, கட்சிக் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுங்கள், இதற்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகிவிடுவீர்கள் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனால், எனது ராஜிநாமாவை கையொப்பமிடும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்றார் பன்னீர் செல்வம்.

மக்கள், கட்சித் தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால், எனது ராஜிநாமைவை திரும்பப் பெறுவேன் என்றும் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்