சிக்கலான தமிழக அரசியல் சூழல்: ஆளுநர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்வதாக ஆளுநருக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதி, அதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், அந்த கடிதத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் சட்ட வழக்குரைஞர் மோகன் பராசரன் தெரிவித்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் : ஓ. பன்னீர்செல்வம்

Image caption ஓ. பன்னீர் செல்வத்துடன் ஆளுநர் வித்யா சாகர் ராவ் (கோப்புப் படம்)

இப்பிரச்சனை குறித்து மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஆனால் இப்போது முதல்வர் தான் ராஜினாமா செய்ய நிர்ப்ந்திக்கப்பட்டதாகவும், தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் கூறிவரும் நிலையில், ஆளுநர் அவருக்கு தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்றார்.

மேலும் அவர், ''யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பதே மரபாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில், தற்போது ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

''மேலும், பதவி விலகிய தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல்வராக தொடர ஆளுநர் அவரிடம் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தான் நிர்பந்திக்கப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டதால்தான் ராஜிநாமா கடிதத்தை கொடுத்தாக தற்போது தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்'' என்று தெரிவித்த மோகன் பராசுரன், ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஏற்கனவே ஏற்றுக் கொண்டதால், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜிநாமா தொடர்பான வழக்கின் தீர்ப்பின்படி தனது ராஜிநாமா கடிதத்தை ஓ. பன்னீர்செல்வம் திரும்ப பெற இயலாது என்று தெரிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அவகாசம் அளிப்பாரா?

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக: சசிகலா குற்றச்சாட்டு

''ஆனால், தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பதால், அவருக்கு ஒரு வாரம் அல்லது குறிப்பிட்ட கால அளவு அவகாசம் அளித்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொள்ளலாம்'' என்று மோகன் பராசுரன் குறிப்பிட்டார்.

தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு குடியரசு தலைவரை சந்திக்க போவதாக சில ஊடகங்கள் தகவலை வெளியுள்ளது குறித்து கூறுகையில், ''இது தொடர்பாக முதலில் ஆளுநரின் விருப்பப்படிதான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன மரபுப்படிதான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். அரசியல் சாசனப் பிரிவுகளின் சாராம்சத்தின்படி அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பதிலளித்தார்.

ஒரு வாரத்தில் வரவிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு

மேலும், சசிகலா தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது, இப்பிரச்சனையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று பராசரன் கூறினார்.

ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒரு வாரத்தில் வரும் - உச்சநீதிமன்றம்

அதனால் இது தொடர்பாக சிந்தித்து முடிவெடுக்க ஆளுநர் எண்ணியிருக்கலாம் என்று மோகன் பராசுரன் தெரிவித்தார்.

''ஆளுநர் தற்போது சென்னைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழலில் அவர் திரும்பவில்லை என்று தெரிகிறது'' என்று கூறிய மோகன் பராசுரன், 356 சட்டப்பிரிவை பயன்படுத்தும் சூழல் தற்போது உள்ளதா என்று கேட்டதற்கு, இல்லை, தற்போது ஏற்பட்டுள்ளது உள்கட்சி பிரச்சனை தான். இது தொடர்பாக 356 சட்டப்பிரிவை பயன்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்