பன்னீர் செல்வம் அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் - என்.ராம் நம்பிக்கை

சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஓ. பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தால், திமுக அவருக்கு ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption என். ராம்

முதலில், சசிகலா முதலமைச்சராகப் போவதில்லை என்று கூறினார்கள். அதற்கு அடுத்து, நேர்மாறாக முடிவெடுத்தார்கள். பிறகு, பன்னீர் செல்வம்தான் முதலமைச்சராக வேண்டும் என சசிகலா கூறினார் என்றார் ராம்.

முதலமைச்சரை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினால் தீவிரமான குற்றச்சாட்டு. சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதனால் உடனடியாக சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது கடினம் என நினைக்கிறேன் என்றார் அவர்.

கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார்கள்: ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

Image caption பன்னீர் செல்வம்

"பன்னீர் செல்வம் ஏற்கெனவே ராஜிநாமா செய்துள்ளார். அதை வாபஸ் பெற முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால், தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக பன்னீர் செல்வம் கூறுவதால், ஆளுநர் தீவிர பரிசீலனை செய்துதான் முடிவெடுக்க வேண்டும். அதற்குள் அடுத்த வாரத்துக்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிடும்,".என்றார் அவர்.

பன்னீர் செல்வம் எந்த நம்பிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராகத் தொடர முடியும் என நம்புகிறார் என்று கேட்டபோது, "திமுக வெளியில் இருந்து, பன்னீர் செல்வம் அரசுக்கு கட்டாயமாக ஆதரவு தெரிவிப்பார்கள். அவரது அரசு ஸ்திரமாக செயல்பட்டு வந்தது அதை இவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்பதுதான் திமுகவின் வாதம். அதனால், பன்னீர் செல்வத்துகு திமுக ஆதரவளிக்கும். சசிகலாவுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள்," என்றார் ராம்.

ஜெயலலிதாவுக்கு விஷம் வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறவில்லை: அ.தி.மு.க.

அப்படி ஆதரவளிப்பது திமுகவுக்கு தற்கொலை முயற்சியாகப் பார்க்க முடியாதா என்று கேட்டபோது, "அப்படிப் பார்க்க முடியாது. ஏனென்றால், இது ஒரு தாற்காலிகமான, தந்திரோபாய நடவடிக்கை என்று சொல்லலாம். பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு இருக்கிறது. அவர் நியாயமாக செயல்பட்டு வந்தார் என்று சொல்லலாம். அதனால் திமுகவுக்கு கஷ்டம் ஏற்படாது," என்றார் ராம்.

திடீரென்று முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது சசிகலாவுக்கு? அதனால்தான், இவ்வளவு நாள் அமைதியாக இருந்த பன்னீர் செல்வம் இப்போது போர்க்கொடி தூக்கியிருக்கிறார். மிகுந்த தயக்கத்துடன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சசிகலா

பாரதீய ஜனதாவைப் பொருத்தவரை, பன்னீர் செல்வத்துக்குத்தான் ஆதரவளிப்பார்கள் என்றார்.

ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் இதில் அதிகம் இல்லை. அவர் நியாயமாகச் செயல்பட வேண்டுமானால், தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜிநாமா செய்யவைக்கப்பட்டதாக பன்னீர் செல்வம் கூறுவது உண்மையா என்று ஆராய வேண்டும். அவர் அவசரமாக செயல்பட வேண்டிய,தில்லை. வேகமாக செயல்பட வேண்டும் என அவரை அவசரப்படுத்த முடியாது. அதை ஆளுநர் ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் ராம்.

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக: சசிகலா குற்றச்சாட்டு

பன்னீர் செல்வம் ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், தனது பலத்தை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் வாய்ப்புக் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஆனால், தான் கட்டாயப்பட்டு ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறியது உண்மை என்பதற்கான ஆதாரம் இருந்தால், அவரது ராஜிநாமா செல்லாது என்றார் ராம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்