''எம்.எல்.ஏக்கள் பிணைக்கைதிகளைப் போல சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்'': மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிணைக் கைதிகள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயல் என்று தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption ''எம்.எல்.ஏக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயல்'' : மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவின் பொது செயலாளர் வி.கே.சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இச்சூழலில், நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை வி.கே.சசிகலா சந்தித்தார். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அ.தி.மு.க தலைமையின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காபந்து முதலமைச்சராக நீடிக்கும் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும், சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி 'பிணைக் கைதி'கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்கள் மாநிலத்தில் நிலையான, சுதந்திரமான, சட்டப்பூர்வமான வழியிலான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார் என்றும், ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்