அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு

அ.தி.மு.கவின் அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை TWITTER

ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு வியாழக்கிழமையன்று மதியம் சென்ற மதுசூதனன், முதல்வரைச் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், "அ.தி.மு.க. ரவுடிகளின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன்" என்றார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தான் கருதுவதாகவும் சர்வாதிகாரிகளிடமிருந்து கட்சியை மீட்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம் என்றும் அ.தி.மு.கவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவரை ஆதரிக்க வேண்டுமென்றும் மதுசூதனன் கூறினார்.

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக: சசிகலா குற்றச்சாட்டு

ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன்,நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடந்த அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மதுசூதனன், திடீரென பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் இன்று பிற்பகலில் சென்னை வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மாலையில் அவரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஓரிடத்தில் ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க எம்எல்ஏக்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி பா.ம.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை அவசர மனுக்களாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்