முதலில் பன்னீர் செல்வம், அடுத்து சசிகலாவை சந்திக்கிறார் ஆளுநர்

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சென்னை வரவுள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மாநில முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொது செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியே சந்திக்கவுள்ளனர்.

Image caption ஓ. பன்னீர் செல்வத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் (கோப்புப்படம்)

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கும் , வி. கே. சசிகலாவை இரவு 7.30 மணிக்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தான் ராஜிநாமா செய்த சூழல் குறித்து ஓ. பன்னீர்செல்வம் ஆளுநரிடம் விளக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் வேளையில், அதிமுக பொது செயலாளர் வி. கே. சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார்கள்: ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்த நிலையில், அவர் முதலமைச்சராகப் பதவியேற்பது தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ள, ஆளுநர் எப்போது சென்னை திரும்புவார் என்று கடந்த 5-ம் தேதி முதல் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ், டெல்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு, மும்பை சென்றுவிட்டார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள அவர், அங்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனால், தமிழக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வித்யாசாகர் ராவ் சென்னை திரும்ப உள்ளதாக மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்