பன்னீர் செல்வமா, சசிகலாவா: நாற்காலி யாருக்கு? ஆளுநர் முடிவெடுக்காததால் தொடரும் மர்மம்

படத்தின் காப்புரிமை DIPR
Image caption ஆளுநரிடம் முதல்வர் மனு

முதலமைச்சர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலர் சசிகலா ஆகிய இருவரையும் சந்தித்து அவர்களது நிலைப்பாட்டைக் கேட்டறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், எந்த முடிவையும் அறிவிக்காததால், தமிழக அரசியலில், அடுத்தது என்ன என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மாலை 5.30 மணிக்கு பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்கினார். தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆளுநரைச் சந்தித்த பன்னீர் செல்வம், மீண்டும் தர்மம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இரவு 7.30 மணிக்கு, மூத்த அமைச்சர்களுடன் ஆளுநரைச் சந்தித்தார் சசிகலா. தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியை வழங்கி, தான் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption ஆளுநரிடம் பட்டியல்

பன்னீர் செல்வம், தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டதாக ஆளுநரிடம் கூறியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுப்பது குறித்தோ, அல்லது ஆட்சியமைக்க சசிகலாவுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தோ எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை.

அதே நேரத்தில், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர் தனது முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், சசிகலாவுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் ஆளுநர் இழுத்தடிப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது என்பது சுப்ரமணியன் சுவாமி போன்ற சில தலைவர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளிலும் தொடர்ந்து எதிர்பார்ப்புகளும் பரபரப்பும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்