சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி அரசமைக்க வேண்டும்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் தற்போது அரசியல் சாசன ரீதியான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தி புதிய அரசை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக ஆளுனரைச் சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN
Image caption ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு

இன்று மாலையில் ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் அவரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றிய பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையிலிருந்து இன்னும் விடுபடவில்லை எனக் கூறியிருக்கிறார்.

ஆளும் கட்சியினரின் நிலையற்ற தன்மையால் மாநிலத்தில் நிர்வாகம் சீர்குலைந்து போயிருப்பதாகவும் தற்போது மாநிலத்தில் அரசியல் சாசன ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும் தி.மு.க. தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தான் கட்டாயப்படுத்தப்பட்டு முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவைக்கப்பட்டதாக பன்னீர்செல்வம் சொல்லியிருப்பதை தன் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், மாநில நிர்வாகம் மாபெரும் சீர்குலைவை எதிர்நோக்கியிருப்பதாகவும் உடனடியாக அரசியல் சாசன அடிப்படையில் ஓர் அரசை அமைப்பதுதான் தற்போதைய தேவை என்றும் ஸ்டாலின் தன் மனுவில் கூறியிருக்கிறார்.

தற்போதைய நிலையில், எந்தத் தாமதமும் இன்றி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி அரசியல் சாசன ரீதியில் செயல்படக்கூடிய ஓர் அரசை அமைக்க வேண்டுமென ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

எம்.எல்.ஏ.க்களிடம் வெள்ளைத்தாளில் கையொப்பம்: சண்முகநாதன் புகார்

இதற்குப் பிறகு ஆளுநர் மாளிகைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், "அரசியல் சாசன ரீதியாக ஆளுநர் செயல்பட வேண்டுமெனக் கேட்டிருக்கிறோம். சிறை பிடித்து வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களை விடுவித்து அவர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்குப் பின்னால் தி.மு.க. இருப்பதாக சசிகலா கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, அவருக்குப் பதில் சொல்லி தன் தரத்தையும் குரைத்துக்கொள்ள தான் தயாரில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்