`மக்களின் விருப்பத்தால் ஓபிஎஸ் அணிக்கு மாறினோம்': அமைச்சர், எம்.பி.க்கள் தகவல்

சசிகலா அணியில் இருந்து தற்போது முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு மாறியுள்ள அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் தொகுதி மக்கள் கூறியதால் அணி மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption தனது ட்விட்டர் தளத்தில் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கப் போவதாக மாஃபா பாண்டியராஜன் வெளியிட்ட பதிவு

வெள்ளிக்கிழமை வரை சசிகலா தரப்பில் இருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் தளத்தில் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் , சனிக்கிழமை காலை ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு மாறி, அவரது இல்லத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் குமார் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் ஆகியோரும் பன்னீர் செல்வம் அணிக்கு மாறியதாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption தனது ட்விட்டர் தளத்தில் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கப் போவதாக மாஃபா பாண்டியராஜன் வெளியிட்ட பதிவு

அவர்கள் தெரிவித்த ருத்துக்கள்:

மாபா பாண்டியராஜன்: அணி மாறியது முரண்பாடு என்று எண்ணவில்லை. சசிகலா முதல்வராக வேண்டும் என நானும் கையெழுத்துப் போட்டேன். தற்போது பொது மக்களிடம் இருந்து, ஏழு நாட்களில் 7,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தன. இளைஞர்கள், பெண்களின் ஆதரவு முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு உள்ளது. சிறு தூறலாக கிளம்பிய இந்த பயணம் மிகப் பெரிய சுனாமியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி எம்.பி. அசோக் குமார்: தொண்டர்கள் இல்லாத தலைமையாகத் தான் சசிகலா தலைமை உள்ளது. சசிகலா தரப்பு மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். எனது தொகுதியில் உள்ள மக்களை சென்று பார்க்க பயமாக உள்ளது. பலர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து திட்டினார்கள். ஓ. பன்னீர் செல்வம் அணியில் தான் இருக்க வேண்டும் என்று எனது தொகுதி மக்கள் சொன்னதால் தான் வந்துள்ளேன்.

நாமக்கல் எம்.பி. பி ஆர் சுந்தரம்: என்றைக்கும் ஓ. பன்னீர் செல்வம்தான் முதல்வர். தமிழகத்தில் உள்ள அனைத்து அதிமுக தொண்டர்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு தான் உள்ளது. நாங்கள் வந்தது ஆரம்பம் தான். இனி அனைவரும் வருவார்கள். தம்பிதுரையை தவிர அனைவரும் வருவார்கள்.