தமிழக அரசியல் குழப்பத்தில் 2 மத்திய அமைச்சர்களுக்கு பங்கு: சுப்ரமணியன் சுவாமி புகார்

படத்தின் காப்புரிமை Subramanian swamy
Image caption ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சுப்ரமணியன் சுவாமி

தமிழக அரசியல் குழப்பத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் ஈடுபாடு காட்டியிருக்கலாம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் பிரச்சனையில், பாரதீய ஜனதா கட்சிக்கோ அல்லது மத்திய அரசுக்கோ எந்தவித ஈடுபாடும் இல்லை என்று தெரிவித்த அவர், இரண்டு அமைச்சர்கள் தனிப்பட்ட அதிகாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றார்.

"அந்த அமைச்சர்களுக்கு தமிழ்நாட்டில் அக்கறை உண்டு. ஏதாவது காரணம் இருக்கலாம். பொதுக்கூட்டம், நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் இரண்டு மூன்று அமைச்சர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்குச் சென்று வருவார்கள். அதனால் அவர்களுக்கு ஈடுபாடு இருக்கலாம்," என்றார்.

அதிமுகவில் சசிகலாவா, பன்னீர் செல்வமா என்று இரு அணிகள் ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சென்னையில் ஆளுநரைச் சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம் என்ன விவாதிக்கப்பட்டது என்று பிபிசி தமிழின் சார்பில் கேட்கப்பட்டது.

காலதாமதத்தின் பின்னணியில் யார் என்பது தெரியும்: சசிகலா

யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் வைத்திருப்பது தவறு என்று குறிப்பிட்ட சுவாமி, குறிப்பிட்ட காலத்துக்கு காத்திருக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புக்களில் கூறியிருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் காத்திருப்பது அதற்குப் பொருந்தாது என்றார்.

"அரசியல் சட்டத்தின் 191-வது பிரிவின்படி, எந்தெந்தப் பிரிவுகளின் கீழ் தகுதியிழப்புச்செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் எதுவும் சசிகலாவுக்குப் பொருந்தாது. எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று ஆய்வு செய்து பார்க்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை," என்றார் சுவாமி.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை சசிகலாதான் கொடுத்திருக்கிறார். பன்னீர் செல்வம் கொடுக்கவில்லை. அதனால் சசிகலாவகுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிக்குமாறு அவரைக் கோர வேண்டும் என்று ஆளுநரிடம் எடுத்துரைத்ததாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

"ஒரு வழக்கின் முடிவை எதிர்பார்த்து ஆளுநர் காத்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், நீதிமன்றத்தில் தேதியை முடிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் அனைத்திலும் தெளிவாக உள்ளது. ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் வந்த பிறகு, யாரும் போட்டிக்கு வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தலைவருக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாம்," என்றார் சுவாமி.

படத்தின் காப்புரிமை Subramanian Swamy
Image caption தனியாகப் போராட்டம்

அரசியல் சட்டத்தின் 164 (4) - ஆவது பிரிவின்படி, பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் உரிமை கோரும்பட்சத்தில், அவர் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் உரிமை ஆளுநருக்கு உள்ளது என்று கூறப்படுவது தவறு என்று சுவாமி குறிப்பிட்டார்.

`நான் வழக்குத் தொடரவில்லை'

ஆளுநர் திங்கட்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால், அரசியல் சட்டப்பிரிவு 32-ன்படி வழக்குத் தொடர முடியும் என்ற அவர், தனக்கு அதற்கு அதிகாரம் இல்லை என்றும், சசிகலாவோ அல்லது எம்.எல்.ஏ.வோ மட்டுமே வழக்குத் தொடர முடியும் என்றும் சுப்ரமணின் சுவாமி.

தான் வழக்குத் தொடரப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என்றும், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

கட்சிக்குள்ளேயே எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் அணி மாறினால், கட்சித் தாவல் தடைச்சட்டப்படி அவர்கள் தகுதியிழப்புக்கு ஆளாவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, சசிகலாவுக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அவர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரும்பட்சத்தில், கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதை மீறினால், அந்த உறுப்பினர்கள் தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்