நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்தவுடன் முதலமைச்சர் ஆகியிருப்பேன்: சசிகலா

போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா ஜெயலலிதா இறந்தவுடன், தான் நினைத்திருந்தால் முதலமைச்சர் ஆகியிருப்பேன் ஆனால் அந்த துக்கத்தில் அதை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @AIADMKOfficial

மேலும் பேசிய சசிகலா, எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்; அந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சியை விட்டு விலக ஜெயலலிதா கூறியவுடன் அவருக்கு தான் தைரியமும் ஆர்வமும் ஊட்டியதாக சசிகலா தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் காலத்தில் ஒரு நாளும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள தான் விரும்பியதில்லை என்று தெரிவித்த சசிகலா, சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமுடன் செயல்பட்டதிலிருந்து தனக்கு சூழ்நிலை புரிந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

"சட்டசபையில் திமுகாவிற்கு எதிராக அவர் பேசியிருந்தால் அவரை தான் தொந்தரவு செய்திருக்க மாட்டேன்; பன்னீர்செல்வத்திற்கு பின்னணியில் திமுக இருப்பது தெரிந்ததால்தான் இந்த முடிவிற்கு வந்தேன், என்னை இந்த நிலைமைக்கு பன்னீர்செல்வம்தான் தள்ளினார்" என்றும் என்று தொண்டர்கள் மத்தியில் தெரிவித்தார் சசிகலா.

"இந்த அரசாங்கம் தொடர்வதற்கு என் உயிரை விடவும் தயார்; போராட்டம் என்பது எனக்கு தூசி மாதிரி ஆயிரம் பன்னீர்செல்வத்தை கண்டவர்கள் நாங்கள்",என்றார் சசிகலா.

"33 ஆண்டுகளாக பெண்கள் இரண்டு பேர் தனியாக போராடினோம்" என்று தன்னையும் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டு பேசினார் சசிகலா

சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது; கட்டாயம் ஆட்சி அமைப்போம் சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்போம் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார் சசிகலா.

தொடர்புடைய தலைப்புகள்