ஓ பி எஸ் இல்லம் முன்பு மோதல்

தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள தற்போதைய சட்ட துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் ஆதரவாளர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு மோதல் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட சில மணிநேரத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தின் இல்லத்தை அடுத்து அமைச்சர் சண்முகத்தின் இல்லம் அமைந்துள்ளது.

இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால், காவல் துறையினர் சமாதானம் செய்ய முயன்றனர்.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து, பன்னீர்செல்வத்தின் தரப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தது வரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றார். ''இது நாள் வரை ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சென்றுள்ளனர்.இங்கு அமைதி நிலவியது. புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மணிநேரத்தில் இந்த கலவரம் நடந்துள்ளது,'' என்றார்.

அவர் மேலும், ''சசிகலா குடும்பத்தினரின் ஆட்சிதான் எடப்பாடி பழனிச்சாமி மூலம் நடைபெறுகிறது. அதிமுகவின் ஆட்சி ஒரு குடும்பத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தான் நாங்கள் தர்ம யுத்தத்தை நடத்திவருகிறோம்,'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்