எம்.எல்.ஏ.க்கள் நல்ல முடிவை எடுக்கக் கோரி வாக்காளர் பேரணி: ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை முதல் தமிழகத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Rex Features

இன்று மாலை, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற பன்னீர் செல்வம், அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது குறித்து குறிப்பிட்ட அவர், "இது ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளின் ஆட்சி இல்லை. சசிகலா குடும்ப ஆட்சிதான் பதவியேற்றுள்ளது. அந்த அரசை நீக்கி மீண்டும் மக்கள் அரசை நிறுவுவோம். இந்த சபதத்தை விரைவில் நிறைவேற்றுவோம்," என்றார் பன்னீர் செல்வம்.

பழனிச்சாமி அரசு பலத்தை நிரூபிக்க 18-ல் பேரவைக் கூட்டம்

"ஜெயலலிதா யாரைத் தூக்கி எறிந்தார்களோ, அவர்களெல்லாம் அவரது வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு, கட்சியை இயக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அதை மாற்றுவதே எங்கள் கொள்கை, குறிக்கோள் என சபதம் ஏற்றுள்ளேன். உறுதியாக, மக்களாட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்றார் பன்னீர் செல்வம்.

"தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக் கோடி மக்களும் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள். அதிமுக தொண்டர்களும், மக்களும் இந்த ஆட்சியை விரும்பவில்லை. அந்த ஆட்சி இன்னும் சிறிது காலத்தில் தூக்கியெறியப்படும்," என பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்