பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு

நாளை தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் : தி.மு.க

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அ.தி.மு.கவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். அவரது அரசுக்கு நம்பிக்கைகோரும் தீர்மானம் நாளை தமிழக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு வருகிறது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை இன்று நடத்தின.

குடும்ப ஆட்சிக்கு எதிராக அழுத்தம் தரும் மக்களைக் கைது செய்யக்கூடாது - ஓ.பன்னீர்செல்வம்

`ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் தொலைபேசித் தொல்லை தாங்க முடியவில்லை'

தி.மு.க.வின் சட்டமன்றக் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தி.மு.க. முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. அந்த ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம்" என்று தெரிவித்தார். மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதை தி.மு.க. வரவேற்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது குறித்தும் குதிரை பேரம் நடப்பது குறித்தும் தமிழக மக்கள் அனைவரும் கேள்வியெழுப்ப வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தற்போதைய சட்டப்பேரவையில் தி.மு.கவிற்கு 89 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கட்சித் தலைமைக்கும் மாநிலப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் நாளை காலைக்குள் முடிவைத் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் முடிவு

எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம்: ஸ்டாலின்

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவுசெய்திருப்பதாக திருநாவுக்கரசர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது தன்னுடைய ட்விட்டர் பக்கமே இல்லையென்றும் தனக்கு ட்விட்டரில் இயங்கத் தெரியாது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

இது தொடர்பாக, அவரது பெயரில் வந்த ட்விட்டர் செய்தி தற்போது அகற்றப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டப்பேரவையில் தி.மு.கவிற்கு 89 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

தற்போதைய அரசு, நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றிபெற 118 வாக்குகளைப் பெற வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசியில் பிரதமர் வாழ்த்து

குடும்ப ஆட்சிக்கு எதிராக அழுத்தம் தரும் மக்களைக் கைது செய்யக்கூடாது - ஓ.பன்னீர்செல்வம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்