சென்னையை அடுத்து கடலூரில் மிதக்கும் எண்ணெய் கழிவுகள்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் சென்னை கடற்கரைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன் மிதந்த எண்ணெய் கசிவுகள், கடலூரில் கடற்கரைப் பகுதியில் காணப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் மீனவ கிராமமான தாழங்குடாவில் தொடங்கி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் எண்ணெய் கழிவுகள் கரையில் தேங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரையில் எண்ணெய் பரவி இருப்பதால், அந்த இடத்தில் கால் வைக்கமுடியவில்லை என்றும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிபிசியிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள் செல்வம் எண்ணெய் கசிவுகள் கரை பகுதியில் உள்ள மணலோடு கலந்திருப்பதால், மீனவர்கள் வலையை எடுத்துச் செல்வதிலும் பிரச்சனை உள்ளது என்றார்.

''தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் சோதனை எதுவும் நடத்தவில்லை. கரையில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை,'' என்றார் அருள்செல்வம்.

சித்ராபேட்டை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ரவி சென்னையில் இந்தப் பிரச்சனை தொடங்கியதில் இருந்தே மக்கள் மீன் வாங்குவதை பலரும் நிறுத்திவிட்டனர் என்றார். ''கடந்த ஒரு வார காலமாக மக்கள் மீன் வாங்குவது முற்றிலும் குறைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இந்த பிரச்னையை முறையிட்டோம். இது வரை எந்த பயனும் இல்லை,'' என்றார்.