தமிழ் வழக்கறிஞர் மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை விமர்சிக்கிறார் மஹிந்த

வழக்கறிஞர் ராமநாதன் கண்ணன் என்பவரை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்ற சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கிய ஒரு அரசியல் கட்சியை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் மட்டக்களப்பில் பணியாற்றிய வழக்கறிஞர் ராமநாதன் கண்ணனுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் பதவி உயர்வுகளை எதிர்பார்த்திருக்கும் கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பலத்த அநீதி ஏற்படுவதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த நியமனத்தின் மூலம் நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மை பறிக்கப்பட்டுள்ளதாக்கவும் குற்றம்சாட்டினார்.

எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை அண்மையில் நிராகரித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை வழக்கறிஞர்களின் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமையவே சம்பந்தப்பட்ட நியமனத்தை தான் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் சிபாரிசின்படிதான் இந்த நியமனத்தை மேற்கொண்டதாக கூறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறான நியமனமொன்றை மேற்கொள்ள சட்டரீதியாக தனக்கு தடைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்