நான் வில்லன் நடிகன் என்பதால் குறைத்து மதிப்பிடாதீர்கள்: ராதா ரவி

நான் யார் மனதையும் நோகடிக்க மாட்டேன். ஆனால், நான் வில்லன் நடிகர் என்பதால் என்னைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ராதா ரவி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Image caption திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்

சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் ராதா ரவி அரசியல் தலைவர்களை பற்றி விமர்சிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியும், தனது சமூகவலைத்தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வாறு பேசினார் என்பது குறித்து பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த ராதா ரவி, மாற்றுத்திறனாளர்களை கேவலமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறினார்.

சில குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை விமர்சிக்கும்போது, அவர்களைக் குறைமாதக் குழந்தைகள் போல் விமர்சித்தாக் கூறினார். "சில தனிப்பட்ட நபர்களைக் குறித்துச் சொல்லும்போது, அதைத் தவறுதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. திமுக தோற்கும் என்று சொல்பவர்ள் குறைமாதக் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்கள் சொல்வதை வைத்து முடிவெடுக்க முடியாது," என்றார் ராதா ரவி.

குறைமாதக் குழந்தைகளைப் போல நடித்துக் காட்டியதால் நிறையப் பேர் தவறுதலாகப் புரிந்துகொண்டார்கள் என்றார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN
Image caption மு.க.ஸ்டாலின்

தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

எதையும் பேசக்கூடாது, பேசக்கூடாது என்றால், எதைத்தான் பேசுவது என்று தெரியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.

"திருவள்ளுவரைச் சொன்னால் கூட அதில் சில தவறுகள் இருக்கலாம். ஆராய்ச்சி செய்துதான் பேச வேண்டும்" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

"நான் யார் மனதையும் நோகடிக்க மாட்டேன். ஆனால், கடுமையாகப் பேச வேண்டுமானால் பேசித்தான் தீருவேன்," என்றார் ராதா ரவி.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இது தொடர்பாக வருத்தம் தெரிவித்தாகக் கூறிய ராதா ரவி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடமும் விளக்கம் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்