`முத்துகிருஷ்ணன் மரணம் கொலைதான்': காரணங்களை பட்டியலிடுகிறார் சக மாணவர்

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம், தற்கொலையல்ல, கொலைதான் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார் முத்துகிருஷ்ணனின் நண்பரும், அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவருமான விஜய் அமிர்தராஜ் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption முத்துகிருஷ்ணன்

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிசிஐடி மூலம், தடயவியல் துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தலித் மாணவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்றும் முத்துகிருஷ்ணனின் தந்தை கோரிக்கை விடுத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

பிரேத பரிசோதனைக்கு மாணவர் தரப்பு இரண்டு மருத்துவர்களைப் பரிந்துரைக்க விரும்பியதாகவும் ஆனால், மாணவரின் சடலம் வைக்கப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக தடயவியல் துறை அதை நிராகரித்துவிட்டதாகவும் விஜய் அமிர்தராஜ் தெரிவித்தார்.

"மாணவர் ஒருவர் இறந்தால், அவர் மன அழுத்தத்தால் இறந்தார் என ஏன் பதிவு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக தலித் மாணவர்களுக்கு மட்டும் ஏற்படுவதாக ஏன் முடிவு செய்ய வேண்டும்?," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"முத்துகிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது.. அவர் தைரியமான நபர். போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யதாததே முதல் சந்தேகம். அந்த மாணவரை யார் அழைத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. மாணவர் உடலை எடுக்கும்போது, தூக்கில் தொங்கியவருக்கு தரையில் கால் பதிந்திருக்கிறது. எப்படி அவர் தூக்கில் தொங்க முடியும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இது தற்கொலையல்ல, கொலைதான் என்ற எண்ணம்தான் வருகிறது.," என்று கூறுகிறார் விஜய் அமிர்தராஜ்.

"காவல் துறை சார்பில் இந்த மரணம் குறித்து விசாரிக்கப்படுவதாகக் கூறப்படும் அதே நேரத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்திலிருந்து வந்த டெல்லி போலீஸ் துணை ஆணையர் மனோஜ் என்பவரை விசாரணைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அவ்வாறு ஏன் நியமிக்க வேண்டும். அதுவே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது," என்றார் விஜய் அமிர்தராஜ்.

Image caption எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள், முத்துகிருஷ்ணன் உறவினர்கள்

பிரேத பரிசோதனைக்கு மாணவர் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவர்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டதாக விஜய் அமிர்தராஜ் கூறினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலையில் என்ன பிரச்சனை?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் புகார் கூறிய அவர், அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்தக் கமிட்டி அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

"ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பாக தலித் மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து நடக்கும் நேர்முகத் தேர்வில், மதிப்பெண் குறைத்தல், இழிவாகப் பேசுவது போன்ற பல பாகுபாபடுகள் காட்டப்படுகின்றன. நேர்முகத் தேர்வு நடக்கும்போது, தோடர் கமிட்டி பரிந்துரைப்படி, நேர்முகத் தேர்வு நடக்கும்போது அந்த சமூகத்தின் பேராசிரியர் இருக்க வேண்டும் என்ற பரிந்துரை பின்பற்றப்படுவது இல்லை," என்றார் விஜய் அமிர்தராஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்