மக்கள் நலக்கூட்டணியில் பிளவுக்கு திமுக காரணமா? ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

தமிழ் நாட்டில் மாற்று அரசியலை முன்னெடுக்கவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Image caption மாற்றம் வருமா?

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் கொள்கைகளுக்கும், நடைமுறைக்கும் மாற்று தேவை என்று உணர்ந்ததால்தான் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவானது என்றும், அதன் அடிப்படையில்தான் இந்த தொகுதியில் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டியக்கத்தோடு கலந்தாய்வு செய்யாமல் இந்த முடிவை அறிவித்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "ஒரு வாரமாக ஐந்து, ஆறு முறை கலந்துரையாடிய பின்னர், மதவாத சக்திகளுக்கு எதிராக முன்னணியில் நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையில் போட்டி, அதிகார வேட்கையில் திமுக போட்டி, கொல்லைப்புற வழியாக நுழைய பாஜக முயற்சி என்ற நிலையில் பல்வேறு கட்சிகளும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றபோது, அவற்றுக்கு மாற்றான அரசியலை வழங்கவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மாற்றம் எப்போது வரும்?

இதனால் மாற்றம் வருமா என்று கேட்டபோது, மாற்றம் நிச்சயமாக வரும் என்று தெரிவித்த ராமகிருஷ்ணன், அது ஒரு நாளில் வருவதல்ல. அத்தகைய மாற்றத்தை கொண்டு வருவதற்கான போராட்டக்களமாக இந்த தேர்தலை பார்ப்பதாக மேலும் கூறியுள்ளார்.

மக்கள் நலக்கூட்டியக்கம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிய நிலையில், அதுதொடர்பாகத்தான் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, உள்ளே விவாதிக்கப்பட்ட விடயங்களை பொது மேடையில் விவாதிக்கத் தயாராக இல்லை என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திமுகவுக்கு ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை, தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசித்த நிலையில் அதை மார்க்சிஸ்ட் ஏற்க மறுத்துவிட்டதா என்ற கேள்விக்கும், அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்றார் ராமகிருஷ்ணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்