இரட்டை இலை முடக்கம்: அதிமுக எதிர்காலம் கேள்விக்குறியாகுமா?

அதிமுகவில் சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினரும் உரிமை கோரியதால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை என தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு, அந்த அணியினருக்கு பாதகமாக அமையுமா, இல்லையா என்பதைத் தாண்டி, யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பற்றிய ஒரு பார்வை.

ஓ. பி. எஸ்.தரப்புக்கு இரட்டை விளக்கு கம்பம், சசிகலா தரப்புக்கு தொப்பி: சின்னங்கள் ஒதுக்கீடு

படத்தின் காப்புரிமை BHASKER SOLANKI
Image caption முதியோரையும் ஈர்த்த இரட்டை இலை

ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்குக் கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா அணிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அதிமுக மற்றும் தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பத்திரிக்கையாளர் மணி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில்,''இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது வரும் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எதிர்காலத்திலும், அதிமுக மற்றும் தமிழக அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறினார்.

மக்களின் அபிமானம் பெற்ற இரட்டை இலை

''வேட்பாளர் என்று யார் கூட பார்க்காமல் முந்தைய பல தேர்தல்களில் இரட்டை இலைக்கு எண்ணற்றோர் வாக்களித்துள்ளனர். தற்போது இந்த சின்னம் முடக்கப்பட்டுள்ளது, அதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை BHASKER SOLANKI

''அதே சமயம், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும்'' என்று தெரிவித்த மணி, எம்.ஜிஆரின் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா என்ற ஆளுமைமிக்க, மக்களை ஈர்க்கும் தலைவர் இருந்தார். ஆனால், தற்போது இரு தரப்புகளில் இவ்வாறான ஒரு தலைவர் இல்லாதது திமுகவுக்கு லாபமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

Image caption ஜெயலலிதா போன்ற மக்களை ஈர்க்கும் தலைவர் அதிமுகவில் இல்லை

மீண்டும் இரு பிரிவுகளும் இணைய வாய்ப்பு உள்ளதா?

''1989-இல் அதிமுக இரு அணிகளாக போட்டியிட்டன. பின்னர், ஜெயலலிதாவின் தலைமையில் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. அப்போது இருந்த சூழல் தற்போது இல்லை'' என்று கூறினார் மணி.

வீழ்ச்சியை சந்திக்கிறதா அதிமுக?

"மேலும், வி.கே. சசிகலா சர்வாதிகார போக்குடன் செயல்படுபவராக காட்சியளிக்கிறார். அதனால் ஓ.பி.எஸ் அணியை அவர் சேர்த்துக் கொள்வார் என்று எண்ண முடியாது என்று தெரிவித்த மணி, சின்னம், கட்சியின் பெயர் மற்றும் ஆளுமை மிக்க தலைவர் ஆகிய மூன்றையும் இழந்துள்ள அதிமுக தற்போது வீழ்ச்சியின் ஆரம்பத்தில் உள்ளது என்று கூறினார்.

ஆர்.கே. நகர் சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே கட்சியின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பற்றி மணி கூறுகையில், ''இந்த முடிவு தொடரும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 1989-இல் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி ராமச்சந்திரன், தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான கட்சியே ஒரே அதிமுக என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அதனால், இரட்டை இலை சின்னம் மீண்டும் கட்சிக்கு கிடைத்தது. தற்போது, அது போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை'' என்று சுட்டிக்காட்டினார்.

Image caption மீண்டும் ஒன்று சேர முடியுமா?

''தற்போது இதுகுறித்து இந்த இரு தரப்புகளும் நீதிமன்றம் செல்ல முடியாது. இந்த இடைக்கால ஏற்பாடு இந்த இடைத்தேர்தலை ஒட்டி எடுக்கப்பட்டது. மீண்டும் இது தொடர்பான விவாதங்கள் ஆரம்பிக்கப்படும் போது, தேர்தல் ஆணையம் மீண்டும் இதே போன்ற முடிவெடுத்தால் , அப்போது அது நீதிமன்றம் கொண்டு செல்லப்படலாம்'' என்று மணி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்