பதவியை பற்றி மட்டுமே கவலைப்படுபவர் ஓ.பி.எஸ். - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்களை பற்றி கவலைப்படாமல், பதவியை பற்றி மட்டுமே எண்ணி கவலைப்படக் கூடியவர் ஓ.பன்னீர்செல்வம் என திமுகவின் செயல் தலைவரும், சட்டப்பேரவையின் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN
Image caption 'பதவியை பற்றி மட்டுமே கவலைப்படுபவர் ஓ.பி.எஸ்'

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மருதுகணேஷுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியிலும் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அதிமுகவின் இரண்டு அணிகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில், "இப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரையில் இரண்டு அணிகளாக அதிமுக நிற்கிறது. அந்த இரண்டு அணியாக நிற்கக்கூடியவர்களில், ஓர் அணியில் நிற்கக்கூடியவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பெரா வழக்கு இருப்பதால், 'பெரா மாஃபியா அணி', என்று சொல்லக்கூடிய தினகரன் அணியாக நிற்கிறது. இன்னொரு அணி 'மணல் மாஃபியா அணி'. சேகர்ரெட்டி என்பவருடன் தொடர்புடைய மணல் மாஃபியா அணி, ஓ.பி.எஸ் தலைமையில் இருக்கக்கூடிய அணி." என்றார்.

மீனவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் அதிமுகவின் இரண்டு அணியினரும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க திமுக முயற்சிகளை முன்னெடுக்கும் என வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் உறுதி அளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்