மே 25-ஆம் தேதி வரை தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டம், மே 25-ஆம் தேதி வரைதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவருமான அய்யாக்கண்ணு அறிவித்தார்.

Image caption தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அய்யாக்கண்ணு கூறுகையில், ''தமிழக முதல்வர், தி.மு.கவின் செயல் தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது'' என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் தாங்கள் பங்கேற்க போவதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Image caption தமிழக விவசாயிகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி

''எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மே 25-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்த அய்யாக்கண்ணு, தாங்கள் இன்றோ, நாளையோ தமிழகம் திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, இன்று காலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், 'விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்துவேன்' என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய விலை கொடுத்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 41 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்கள் மண்சோறு உண்பது, எலிக்கறி, சாட்டையடி, நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்: எடப்பாடி பழனிச்சாமி

எலிக்கறி, சாட்டையடி, மண்சோறு: தமிழக விவசாயிகளின் நூதன போராட்டங்கள் (புகைப்பட தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்