ஆண்கள் வீட்டுவேலை செய்யத் தயாராகிவிட்டார்களா?

  • 5 மே 2017

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அவ்வப்போது கணக்கெடுப்புகளை நடத்துவது அனைவரும் அறிந்ததுதான்.ஆண்கள் அளவுக்கு வேலைகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் நிதர்சனமே.

ஊரகப்பகுதிகளில் வேலைக்குச் செல்லும் 55 ஆண்களுக்கு நிகராக 25 பெண்கள்தான் வேலை பார்க்கிறார்கள் என்றால், அதுவே நகர்ப்புறத்தில் இன்னும் குறைவாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. நகரங்களில் 56 ஆண்களுக்கு நிகராக 16 பெண்கள்தான் வேலைக்குச் செல்கிறார்கள் என்கிறது அண்மை கணக்கெடுப்பு.

இது வெளிவேலைகளை மட்டும்தான் சுட்டிக்காட்டுகிறது. வீட்டு வேலைகளை யார் செய்கிறார்கள் என்றும் அரசு அண்மையில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. இதன் முடிவு என்னவாயிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், புள்ளிவிவரங்கள் தானே கணக்கெடுப்பின் ஆதாரம்?

வீட்டுவேலைகளின் மையமாக பெண்கள் மட்டுமே இருப்பதாக கூறும் அந்த ஆய்வு, வெறும் 0.4 சதவிகித ஆண்கள் மட்டுமே வீட்டு வேலைகளை செய்கிறார்கள் என்கிறது!

ஆனால், இந்த தோற்றம் இனி மாறலாம். மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும், அதற்கு வீட்டுவேலைகள் தொடர்பான சமுதாய கண்ணோட்டமும் மாறவேண்டும். சிறுவர்களும் 'ஹோம் சயின்ஸ்' படிக்கவேண்டும் என்ற பரிந்துரையை, அரசு தீவிரமாக பரிசீலித்து, செயல்படுத்தவேண்டும்.

இந்தியாவின், மத்திய அரசு 'பெண்களுக்கான தேசிய கொள்கையை' உருவாக்கிவருகிறது. தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான ஒரு கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த பரிந்துரையை முன்வைத்ததாக ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.

மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஹோம் சயின்ஸை கற்றுக் கொடுப்பது, பழைய மனோபாவங்களின் இயல்பான மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கும் என்று சுஷ்மா கருத்து தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா?

ஆண்களும், பெண்களும் வெளிவேலைகளில் ஈடுபடுவது இயல்பாகிவிட்டது என்றபோதிலும், பெண்களுக்கான வேலைச்சுமை அதிகரித்துவிட்டது என்று சொல்கிறார் இந்திய அமைச்சர்.

படத்தின் காப்புரிமை SAID KHATIB/AFP/Getty Images

அவருடைய கருத்து அப்பட்டமான உண்மை என்றாலும், சட்டமாக மாறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது… ஆனால் இது, சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜுக்கு உவப்பானதாக இல்லை.

தனது டிவிட்டரில் அவர் எழுதுகிறார், "கெட்ட காலம் வரப்போகிறது…"

இதை அவர் வேடிக்கையாகவோ, விளையாட்டாகவோ எழுதியிருக்கலாம். அல்லது வீட்டில் எப்போதுமே வேலை செய்யாதவராக இருக்கலாம். எனவே இந்த பரிந்துரைக்கு அவர் முரண்படலாம்.

பெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்கம்

எது எப்படியிருந்தாலும், இந்த டிவிட் செய்தி பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. டிவிட்டரில் அவரைத் தொடரும் பல பெண்களும் அவரை தர்மசங்கடமாக்கும் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

மீனாக்‌ஷி திக்‌ஷித் தனது டிவிட்டர் செய்தியில் "சார், கெட்ட காலம் வரப்போகிறது என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னமும் நீங்கள் வீட்டு வேலையை கற்றுக்கொள்ளவில்லையா?" என்று கேட்கிறார்.

படத்தின் காப்புரிமை SHAMMI MEHRA/AFP/Getty Images)

ரிஷிதா கூறுகிறார், "நல்ல காலம் வரப்போகிறது...", மாயா கேட்கிறார், "இதுவரை நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவில்லையா?".

மெல்ல மெல்ல மாற்றங்கள்

ஆனால், வீட்டுவேலைகளில் கைகொடுப்பது தவறு என்ற எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டது.

கடந்த தசாப்தத்தில் பெண்கள் வளரும் போது, அவர்களுக்கான கற்பித்தல்களும் மாறின, உயர் கல்வி வழங்குவது உயர்ந்தது, வாகனங்களை சுயமாகவே ஓட்டிக் கொண்டு, எல்லா இடத்திற்கும் செல்வதும் சாத்தியமானது.

துபாயில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் வீட்டுப் பணிப்பெண்கள்: புதிய அறிக்கை

ஆசிரியர், செவிலியர் பணிகளுக்கு மட்டுமே பெண்கள் ஏற்றவர்கள் என்ற எண்ணம் மாறி, கடினமான, நீண்ட நேரம் பார்க்கும் வேலைகளிலும் பெண்கள் ஈடுபடத் தொடங்கினார்கள். காலங்காலமாக பெண்கள் பார்த்து வந்த வீட்டுவேலையைத் தவிர பெண்களின் வேலை பார்க்கும் திறமையும், துறைகளும் அதிகரித்தாலும், ஆண்கள் அதே இடத்திலேயே இருக்கின்றனர், இதுவரை ஈடுபடாத வேறு புதியத் துறைக்கு, அதாவது வீட்டுவேலைகளுக்கு ஆண்கள் இன்னும் இயல்பாகவில்லை.

படத்தின் காப்புரிமை ARINDAM DEY/AFP/Getty Images

ஆண்களுக்கு சமையல் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை, உடல் நலிவுற்ற குழந்தை மற்றும் தனது பெற்றோரை பார்த்துக் கொள்ள, தான் விடுப்பு எடுப்பதற்கு பதிலாக மனைவியே விடுப்பு எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மாறவில்லை.

அலுவலகப் பணிகளுக்கு பிறகு, வீட்டுவேலைகளை முடித்துவிட்டு, இரவு வெகுநேரம் விழித்திருந்து அலுவலக வேலையை செய்துவிட்டு மனைவி அயர்ந்து உறங்கினால், அவருக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, காலையில் மனைவியின் வீட்டுவேலையை பகிர்ந்துக் கொள்ளவேண்டும், அல்லது குறைந்தபட்சம், பணியாளர்களை வேலை செய்ய பணிக்கவும் ஆண்களுக்கு தோன்றுவதில்லை.

புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

இந்த தோற்றம் சில குடும்பங்களில் மாறியிருக்கலாம், ஆனால் பரவலாக பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றமே! அரசின் அண்மையக் கணக்கெடுப்பே அதற்கான சான்று.

இந்தக் கணக்கெடுப்பின்போது, நீங்களே ஏன் வீட்டுவேலைகளை செய்கிறீர்கள்? அது உங்களுக்கு பிடித்தமானதா என்று கேட்கப்பட்டதற்கு, பெண்களின் பதில் என்ன தெரியுமா? " இல்லை, வீட்டில் இருக்கும் வேறு யாரும் வேலை செய்வதில்லை, எனவே நான் செய்கிறேன்".

படத்தின் காப்புரிமை Allison Joyce/Getty Image

இது ஓர் அற்பமான விஷயம் போல தோன்றினாலும், இதன் பின்னணி மிகவும் ஆழமானது. வேலைக்கு போகவேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும் பெண்கள், இரட்டை சுமைக்கு தயாராகிவிடுகிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்களில் பலர், திருமணமாகி குழந்தை பிறந்ததும், வேலையை விடும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி, 18-24 சதவிகித பெண்களே, கருவுற்ற பிறகு, தங்கள் வேலையில் தொடர்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு பெண், அரசியல்வாதியாக இருக்க சிறந்த இடம் எது?

சமத்துவம் மற்றும் பெண் விடுதலை என்ற சொற்றொடர்களை காலமாற்றத்தினால் ஆண்களின் அறிவு ஏற்றுக் கொண்டாலும், அதன் முழுமையான பொருளை தெரிந்து கொண்டார்களா? அதை அமல்படுத்துவதற்கு மனம் தயாராகிவிட்டதா? இப்படி தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் கிடைக்கும்போது தான், எதிர்காலத்திலாவது 'நல்ல நாள்' வரும் என்று எதிர்பார்க்கலாம்

இல்லாவிட்டால் சமத்துவ தராசு ஒரு பக்கம் எப்போதும் தாழ்ந்தே இருக்கும். அது சமுதாயத்திற்கு நல்லதல்ல.

இதைப் படிக்கும் நீங்களும், பெண்களுக்காக எதாவது செய்ய விரும்புகிறீர்களா? இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்பலாம். பெண்களுக்கான தேசிய கொள்கை உருவாக்கத்தில் நீங்களும் பங்களிக்கலாம் உங்கள் பரிந்துரைகளால்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்