பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் அனுமதி

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பத்து வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர் குழு ஒப்புதல்வழங்கியுள்ளது.

ஹரியாணா மாநிலம் ரோதக்கில் பத்து வயது சிறுமி, தனது வளர்ப்புத் தந்தையால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு முன் கருவுற்றார். சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற குடும்பத்தின் கோரிக்கையை, நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மருத்துவ அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரியைச் சேர்ந்த (பி.ஜி.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் கூடி பரிசீலித்து அனுமதி வழங்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

கருக்கலைப்பு எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்று மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் அஷோக் செளஹான் பிபிசியிடம் கூறினார்.

"சிறுமி சுமார் 20 வார கருவை சுமக்கிறார், அது 19 வாரம் அல்லது 21 வாரக் கருவாகவும் இருக்கலாம். கருவின் வளர்ச்சி எந்த வாரத்தில் உள்ளது என்பதை துல்லியமாக தெரிவிக்கும் தொழில்நுட்பம் இல்லை என்று அவர் கூறினார்."

இந்திய சட்டங்களின்படி, பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்ற சூழ்நிலையைத் தவிர, இருபது வாரத்தை தாண்டிய கருவை கலைக்கமுடியாது.

ஆண் குழந்தைகளுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் தெரிந்துக் கொண்டு, பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்றுவிடுகின்றனர். இலட்சக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.

எனவே, பாலின விகிதாசாரத்தை சமமாக வைக்கும் நோக்கில் கருக்கலைப்பு தொடர்பான கடுமையான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களில் பாலியல் வல்லுறவின் மூலம் கருவுற்ற சில பெண்கள், இருபது வார வளர்ச்சியடைந்த கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற மனுக்கள் குறித்து நீதிமன்றம், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி முடிவெடுக்கும்.

வீட்டு வேலை செய்யும் சிறுமியின் தாய், தனது பத்து வயது மகள் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

தனது தாய் வேலைக்கு சென்றிருக்கும்போது, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த, தாயின் இரண்டாவது கணவர், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்ததாக சிறுமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டு, காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்