ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு

உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஒரே வாரத்திற்கும் குறைந்த காலத்தில் இரண்டு முறை அடைந்து ஒரு இந்திய பெண் சாதனை படைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை DREAM HIMALAYA ADVENTURES

இரண்டு குழந்தைகளுக்கு தாயான 37 வயது அன்ஷு ஜம்சென்பா, மே மாதம் 16ம் தேதி மற்றும் 21ம் தேதி என இரண்டு நாட்களில் எவெரெஸ்ட் மலையை அடைந்ததாக சுற்றுலாத்துறை அதிகாரியான கியானேந்திரா ஷ்ரேஸ்தா பிபிசி நேபாளி சேவையிடம் உறுதிப்படுத்தினார்.

ஒரு பெண் எவெரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறுவதில் தற்போதைய கின்னஸ் சாதனை என்பது ஏழு நாட்கள் என்பதுதான்.

ஒரே வாரத்தில், மலையேறும் மூன்று நபர்கள் இறந்துவிட்டனர் என்ற செய்தியை அடுத்து அன்ஷுவின் சாதனை செய்தி வந்துள்ளது.

திபெத்திய பகுதியில் ஒரு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேறும் நபர் இறந்துவிட்டார். அதே சமயம் ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர் என மூவர் கடந்த வாரத்தில் இறந்துள்ளனர்.

மலை உச்சியை அடைந்த சிறிது நேரத்தில் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த நான்காவது நபரை கண்டுபிடிப்பதில் மீட்பு பணியாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

அடுத்த மாதத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மலையேறும் நூற்றுக்கணக்கானவர்கள் உலகின் உயரமான மலை உச்சியை தொட்டுவிட வேண்டும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்ஷு இரண்டு முறை எவெரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை படைத்தது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னர் 2011ல் அவர் இதே போன்ற இரண்டு முறை மலை உச்சியை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றார். ஆனால் அப்போது, பத்து நாள் இடைவெளியில் அவர் இந்த சாதனையைச் செய்தார்.

நேபாள அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சான்றளித்த பின்னர், அதை கின்னஸ் உலக சாதனை அமைப்புடன் தொடர்பு கொண்டு அன்ஷூ பதிவு செய்ய வேண்டும்.

பெண்கள் மலையேறும் சாதனையைப் பொறுத்தவரை, தற்போது இருக்கும் சாதனை, நேபாளத்தை சேர்ந்த மலையேறும் பெண்மணி சுரிம் ஷெர்பா என்பவர் 2012ல் படைத்த சாதனைதான்,

அன்ஷுவின் தற்போதைய இரண்டு முறை மலையேறும் சாதனை மட்டுமல்லாமல், அவர் 2013லும் எவெரெஸ்ட் ஏறியுள்ளார்.

எவெரெஸ்ட் சிகரத்தை இரு முறை ஏறும் சாதனையை இரண்டு முறை செய்யவேண்டும் என்பதுதான் அன்ஷுவின் திட்டமாக இருந்தது, ஆனால் 2014ல் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகவும் 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக அன்ஷுவின் முயற்சி வெற்றிபெறவில்லை என அவரது கணவர் செரிங் வாங் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

எவெரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் மூவர் பலி, ஒருவர் காணவில்லை

எவெரெஸ்ட் சிகரம் தொட்ட தம்பதிகளின் சாதனை உண்மையா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்