நல்ல காலம் யாருக்கு? மக்களுக்கு அல்ல!

  • 26 மே 2017

(பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்றாண்டுகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி, தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும், பகுப்பாய்வாளர்களும் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் முதலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை இன்று வெளியாகிறது. இத்தொடர்களில் வெளியாகும் கருத்துகள் கட்டுரையாளர்களுடையவையே. பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜி. ராமகிருஷ்ணன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதுதான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்ல காலம் (அச்சா தின்) பிறக்கும் என்று நரேந்திரமோதி கூறினார். ஆட்சியமைத்த பிறகும் நல்லகாலம் விரைவில் வரப்போகிறது என்று கூறினார். ஆனால் நல்லகாலம் யாருக்கு என்பதே கேள்வி?

மோதியின் 3 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நல்லகாலம் மக் களுக்கல்ல என்பது நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசின் கூற்றுப்படியே 2014 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 12,360 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,602 ஆகும். 2016ல் தமிழகத்திலும் சுமார் 400 விவசாயிகள் தற்கொலை அல்லது அதிர்ச்சி காரணமாக உயிரிழந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும்(தமிழகத்தில் 400 விவசாயிகள் உட்பட) அதிகமான விவசாயிகளின் தற்கொலை நிகழ்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 3 ஆண்டு மதிப்பீடு என்ன?

மறுபுறம் கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையில் மேல்தட்டிலுள்ள ஒரு சதவீதம் குடும்பங்கள் தேசத்தின் மொத்த சொத்தில் 49 சதவீதம் வைத்திருந்தனர். தற்போது இது 58.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நரேந்திர மோதி கூறிய நல்லகாலம் என்பது கார்ப்பரேட் உள்ளிட்ட மேல்தட்டில் உள்ள ஒரு சதவீத குடும்பங்களுக்கு தான் வந்துள்ளது, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மோதியின் ஆட்சி மிக மிக கெட்டகாலமாக உள்ளது.

ஏன் இந்த நிலைமை?

தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோதி விவசாயிகளுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார். விவசாயத்தில் சாகுபடிக்கு ஆகும் செலவைவிட 1.5 மடங்கு கூடுதலாக விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை தருவோம் என்று பல கூட்டங்களில் மோதி முழங்கினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர்பல்டி அடித்தார். இது தொடர்பான வழக்கு ஒன்றில் மோதி அரசாங்கம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் விவசாயிகளுக்கு 1.5 மடங்கு கூடுதலாக விலை தருவது சாத்தியமல்ல. விரும்பத்தக்கதுமல்ல என்று கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

தான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவோம் என நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் வெறும் 1 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரமே கூறுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபம் உருவெடுத்துள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 6 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என பல ஆய்வு நிறுவனங்கள் அபாய சங்கு ஊதியுள்ளன. எல்.என்.டி போன்ற உற்பத்தி நிறுவனம் கூட 14 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்துள்ளது. மோதியின் ஆட்சியில் வேலை வாய்ப்பு கூடுவதற்கு பதிலாக இருக்கின்ற வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டுவருகின்றன.

விவசாயக் கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள்

அதே சமயத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோதி அரசாங்கம் சலுகை அளிக்கிறது. கடந்த நிதியாண்டில் (2016-17) அரசு வங்கிகளிலிருந்து கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கி திருப்பி செலுத்தாத வாராக் கடன் 29.01 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக இன்றைய செய்தி (25.5.2017) கூறுகிறது. மறுபுறம் தேசிய வங்கிகளிடமிருந்து விவசாயிகள் பெற்ற கடனை வசூல் செய்வதற்கு ஜப்தி உள்ளிட்ட பல கெடுபிடிகளை அரசு செய்கிறது.

கோடி கோடியாக கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும், வாராக் கடனை கெட்ட கடனாக்கி ரத்து செய்யும் மத்திய அரசு விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கு மறுத்துவிட்டது. 40 நாட்களுக்கு மேல் வேகாத வெயிலில் டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் வெறுங்கையோடு தமிழகத்திற்கு திரும்பினார்கள்.

பல மாநிலங்களில் சிறப்பாக இருந்த பொதுவிநியோக முறை முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்குமான பொதுவிநியோகம்தான் எங்கள் கொள்கை என்று தேர்தல் அறிக்கையில் எழுதி வைத்துவிட்டு தற்போது பொதுவிநியோகத்தையே சிதைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் 50 சதவிகிதம் பேருக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காது என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ரேசனில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெய்யையும், சர்க்கரையையும் ரத்து செய்ய முயற்சிக்கிறார்கள்.

ஆதார் பல்டி!

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆதாருக்கு எதிரான போராட்டம்

எதிர்கட்சியாக இருந்தபோது ஆதார் ஓப் ஆபத்து என்று கூறியவர்கள் இப்போது அதை கட்டாயமாக்கி பலருக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் கார்டுகளுக்கு ரேசன் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 399/- ரூபாயாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை தற்போது ரூ. 732/- ரூபாயாக ஏறத்தாழ ஒரு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள் பெறும் மானியத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதுவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்த இந்த காலத்தில்தான் இது நடந்திருக்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கனை தனியாருக்கு தாரை வார்க்க கங்கனம் கட்டி செயல்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், தனியார்மயமாக்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதன் பலன் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு போய் சேரும் என்று வாய்ப் பந்தல் போட்டார்கள். ஆனால் 11 முறை கலால் வரியை ஏற்றி மொத்த கலால்வரியை இரண்டு மடங்காக்கி விலை குறைக்கும் பயனை மக்கள் அனுபவிக்க முடியாமல் கொள்ளையடித்தார்கள்.

தமிழகத்திற்கு துரோகம்

மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, கீழடி அகழாய்வுக்கு தடை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, வர்தா புயல், வறட்சி நிவாரணத்தில் வஞ்சகம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவது, தமிழகத்திற்கான ரேசன் பொருட்கள் வெட்டி குறைப்பு என மாநில உரிமைகளின் மீது அடிமேல் அடியாக தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மோதி அரசுக்கு எதிரான போராட்டம்

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளையும் தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் முறையில் அருணாச்சலப் பிரதேசம், உத்தராகாண்ட்டில் ஆளுநர்களை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்தார்கள். டெல்லியிலும், பாண்டிச்சேரியிலும், தமிழகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை, அரசுகளை முடக்குவதற்கும், ஊனமாக்குவதற்கும், சிதைப்பதற்கும் ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்.

பசுமாட்டு அரசியல்

படத்தின் காப்புரிமை Getty Images

இவற்றில் இருந்து எல்லாம் மக்களின் கோபத்தை திசை திருப்பவும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்கும் பசு மாட்டு அரசியலை முன்வைக்கிறார்கள். ஆளுங்கட்சியின் ஆதரவோடு பசுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் கொலையாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பாஜக அரசியல் லாபத்திற்காக இந்த மோதல்களை உருவாக்கி, வலுப்படுத்தி மக்களை பிளவுபட்டு நிற்க வைக்கிறது. உ.பி. மாநிலம் சஹாரன்பூரிலும், குஜராத்தில் உரியிலும் தலித் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாடறியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் கருத்து சுதந்திரம், மனித உரிமைகள், எழுத்துச் சுதந்திரம், ஊடக உரிமை இவையெல்லாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர் ஆளுங்கட்சியின் சகோதர அமைப்புகளால் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மிகக் கடுமையாக மிரட்டப்படுகின்றனர்.

கடந்த மூன்றாண்டுகளில் அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், பாதுகாப்பு என்று எல்லா துறைகளிலும் பாஜகவின் மூன்றாண்டு கால ஆட்சி மிகப்பெரிய தோல்வியே. இவற்றையெல்லாம் முட்டுக் கொடுக்க பண பலம், அதிகார பலம், அடியாள் பலத்தின் மூலம் எல்லாம் நன்றாய் நடக்கிறது என்று காட்ட முயற்சிக்கிறது.

(கட்டுரையாளர் - ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் - சிபிஐ (எம்), தமிழ்நாடு மாநிலக்குழு)

இதையும் படிக்கலாம்:

‘தேசிய பாதுகாப்புக் கொள்கையில் மோதியை விட இந்திரா சிறந்தவரா?’

சர்ச்சையைக் கிளப்பும் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணம்

பிரதமர் அலுவலகம் எதிரே விவசாயிகள் நிர்வாண போராட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்