விராட் கோலிக்கு பிடிக்காததால் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எதிரெதிர் துருவங்களாக...

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு பின்னடைவாக, அணியின் கேப்டன் விராட் கோலிக்குப் பிடிக்காததால், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனக்குமுறல்களை வெளியிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே இதுபற்றிய ஊகங்கள் உலா வந்த நிலையில், தற்போது உறுதியாகியிருக்கிறது.

கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தான் கெளரவமடைந்ததாகவும், கடந்த ஓராண்டில் அடைந்த சாதனைகளுக்கு அணியின் கேப்டன், வீரர்கள், பயிற்சி மற்றும் துணை ஊழியர்களுக்கே எல்லா பெருமைகளும் சென்றடையும் என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER/@ANILKUMBLE1074
Image caption ட்விட்டரில் கும்ப்ளே அறிக்கை

"எனது ஸ்டைல் (செயல்படும் விதம்) கேப்டனுக்குப் பிடிக்கவில்லை என்றும், நான் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் முதல் முறையாக பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) நிர்வாகத்தின் சார்பில் முதல் முறையாக நேற்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் உள்ள எல்லை வரையறை குறித்து நான் எப்போதும் மதிப்பவன் என்பதால் அதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன்" என கும்ப்ளே தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

"கேப்டனுக்கும் எனக்கும் இடையிலான குழப்பத்தைத் தீர்த்து வைக்க பிசிசிஐ நிர்வாகம் முயற்சி செய்தாலும் கூட, அது மீண்டும் சேர முடியாத அளவுக்குப் போய்விட்டது. அதனால், விலகிச் செல்வதே நல்லது என நான் நம்புகிறேன்" என்று கும்ப்ளே தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இணைய முடியாத இணை!

"தொழில்முறை, கட்டுப்பாடு, ஈடுபாடு, நேர்மை, கூடுதல் திறன், பரந்துபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை நான் பயிற்சியாளனாக அணிக்குக் கொண்டுவந்தேன். இணைந்து செயல்பட வேண்டுமானால், இந்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும் " என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"இந்தக் கருத் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதே சரியானது என்று நான் நம்புகிறேன்" என கும்ப்ளே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

கிரிக்கெட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள கும்ப்ளே, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்துக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை TWITTER/@BHOGLEHARSHA
Image caption ஹர்ஷா போக்லே கருத்து

இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் மோதல் ஏற்படும்போது, கேப்டனின் கைதான் ஓங்கும் என்பது தவிர்க்க முடியாதது என்று கூறப்படும் நிலையில், கும்ப்ளேவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படாவிட்டால் தான் ஏமாற்றமடைவேன் என தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்து இரண்டு நாட்களில் இந்திய அணியில் நடக்கும் உச்சகட்ட மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கிரிக்கெட் தொடர்பான செய்திகள்:

கிரிக்கெட்: தோல்வித் துயரத்தை மீம்களில் கரைக்கும் ரசிகர்கள் !

இந்திய அணியின் படுதோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்

இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது

இதையும் படிக்கலாம்:

''1000 லைக்குகள் வேண்டும் இல்லையெனில் குழந்தையை தூக்கி போட்டுவிடுவேன்''

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

பெரும்புள்ளிகளை எப்படி வீழ்த்தினார் ராம்நாத் கோவிந்த்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்