'அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் பலமாக உள்ளது' - டிரம்ப்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான தனது சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் பலமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

நரேந்திர மோதியுடன் இணைந்து நடத்திய கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக தான்ஆவலுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் திங்களன்று நடந்த பேச்சுவார்த்தையில், இவ்விரு தலைவர்களும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

வெள்ளை மாளிகையில் அமைந்திருக்கும் ரோஸ் கார்டன் பகுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், '' அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் வலுவாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன'' என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டிரம்ப் -மோதி சந்திப்பு

சமூகவலைத்தளமான டிவிட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிடும் டிரம்ப், தன்னையும், இந்திய பிரதமர் மோதியையும் ''சமூகவலைத்தளத்தில் பிரபலமான உலகத்தலைவர்கள்'' என்று வர்ணித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பான புகலிடங்களாக விளங்கும் பகுதிகளை அகற்றுவது, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பில் ஒரு முக்கிய பங்காற்றும் என்று இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்தியாவுக்கு வர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக். மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உள்ளிட்ட 20 முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களை நரேந்திர மோதி சந்தித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

வணிகரீதியாக நட்பான நாடாகவும், முதலீடுகளுக்கு ஏற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற தனது அரசு ஆயிரக்கணக்கான சீர்திருத்தங்களை கொண்டு வந்ததாக அவர்களிடம் மோதி எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் விடுத்த டிவிட்டர் செய்தியில், ''முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் உரையாடினேன். இந்தியாவில் உள்ள வணிக வாய்ப்புக்கள் குறித்து நாங்கள் விரிவான ஆலோசனைகள் நடத்தினோம்'' என்று மோதி தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே வலுவான பொருளாதார சக்திகளாக இருந்த போதிலும், குடியேற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகிறது.

பிற செய்திகள்:

வெள்ளை மாளிகையில் `ஈத்` விருந்து வழக்கத்தை நிறுத்திய டிரம்ப்

10 ஆண்டுகளில் 10 கருச்சிதைவுகள்: ஒரு தம்பதியின் துயரம்

மசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்

கொச்சி மெட்ரோவுக்கு நியமனமான திருநங்கைகள் வீட்டு வசதி கோருகிறார்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்