சமூக ஊடகங்களில் `மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!

`மீம்கள் என்பதை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாம் என செயல்பட்டு வருகிறது டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று.

படத்தின் காப்புரிமை The sight media
Image caption சமூக ஊடகங்களில் `மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!

டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங் மூலம் தங்களது வாடிக்கையாளர்களின் பொருட்களை அல்லது சேவைகளை பயன்பாட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பாணியைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் ஒன்று "தி சைட் மீடியா."

டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங்கில், சமூக ஊடகத்தை பெரிதாக பயன்படுத்தி வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைகின்றனர்.

ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட `தி சைட் மீடியா நிறுவனம்` ஆர்குட்டின் ஸ்க்ராப் வாலை` பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் மீடியா விளம்பரத் தொழிலை தொடங்கியுள்ளனர்.

தாங்கள் தொடங்கிய காலத்தில் டிஜிட்டல் மீடியா மார்கெட்டிங் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக மக்களிடம் இல்லை என்கிறார் `தி சைட் மீடியா` நிறுவனத்தின் நிறுவனர் லோகேஷ் ஜே.

Image caption தி சைட் மீடியா நிறுவனர் லோகேஷ் ஜே

சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன்மூலம் தங்களின் பொருட்களையும், சேவைகளையும் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் யுத்தியை பல நிறுவனங்கள் விரும்புகின்றனர்.

130 முகநூல் பக்கங்கள்

பொழுதுபோக்கிற்காக, மாணவர்களுக்காக, தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்காக என ஒவ்வொரு தரப்பினருக்கும் ஏற்றவாரு முகநூல் பக்கங்களையும் குழுக்களையும் தொடங்கியுள்ளார் ’தி சைட் மீடியா’ நிறுவனத்தின் நி்றுவனர் லோகேஷ் ஜே.

தங்களது வாடிக்கையாளர்களின் அதிகாரபூர்வ பக்கங்களை நிர்வகிக்கும் இவர்கள், சென்னையட்ஸ், சர்காஸ்டிக் இந்தியன், லாஜிக்கல் தமிழன், மீம் எஞ்சினியர் என தனித்தனியாக சுமார் 130 முகநூல் பக்கங்களை நிர்வகிக்கின்றனர்.

மொத்தம் 3.2 கோடி பேர் தங்களின் இந்த பக்கங்களை பின் தொடர்வதாகவும் தெரிவிக்கிறார் லோகேஷ்.

படத்தின் காப்புரிமை The sight media

எனவே தாங்கள் நிர்வகிக்கும் பக்கங்களில் அது தொடர்பான செய்திகளை பகிர்ந்துவிட்டு விளம்பரம் குறித்த மீம்களையும் பகிர்வோம் என்கிறார் லோகேஷ்.

இது ஒரு வகையில் டார்கெட் மார்கெட்டிங் என்றும் சொல்லலாம். அதாவது ஒரு சேவை இளைஞர்களுக்கானது என்றால் அதனை இளைஞர்களுக்கான முகநூல் பக்கங்களில் பகிர்வது மூலம் யாரை முன்னிறுத்தி அந்த சேவைகள் வழங்கப்படுகிறதோ அவர்களிடம் அதனை பற்றியத் தகவல் நேரடியாக சென்று சேர்கிறது.

பெரும்பாலான சமயங்களில் ஒரு முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பர செய்தியை பகிரும்போது அதை மீம்களாக பதிவிடுகின்றனர்; வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்தும் "தங்களின் சேவைகளை மீம்களாக விளம்பர படுத்துமாறுதான்" கோரிக்கைகளும் வருவதாக கூறுகிறார் லோகேஷ் ஜே.

படத்தின் காப்புரிமை The sight media

மீம் என்பது நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் தங்கள் சேவைகள் அதிகமாக சென்று சேர்கிறது என நம்புகின்றனர் சேவைகளை வழங்குபவர்கள்.

மேலும் மீம்கள் மூலம் இளைஞர்களிடம் தங்கள் சேவைகளை விரைவாகவும் கொண்டு சேர்க்க முடியும்.

"பயனுள்ள தகவல்களும் மீம் வடிவில்"

உதாரணமாக, சென்னை வடபழனியில் உள்ள ஒரு பல்லடுக்கு வணிக வளாகத்துக்கு அதன் பிரதான நுழைவாயில் வழியாக வரும் வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே அதை குறைக்க அருகிலுள்ள இன்னொரு மெட்ரோ ரயில் நுழை வாயிலை வாடிக்கையாளர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வகையில் மீம்ஸ் வடிவில் விளம்பரம் வடிவமைக்க வேண்டும் என்று இந்த நிறுவனத்தி்னரிடம் தெரிவிக்கப்பட்டது;

அவர்கள் அதை `கிட்ஸ், மென், மற்றும் லெஜண்ட் என்ற மீமை கொண்டு, அனைவரையும் ஈர்க்கும் வகையில், ஆனால் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் அதை வடிவமைத்ததாகவும், அதனால் நல்ல பலன் ஏற்பட்டதாகவும் லோகேஷ் தெரிவித்தார்.

விளம்பரங்கள் மட்டுமன்றி, பொதுமக்களுக்குப் பயனுள்ள தகவல்களையும் மீம்கள் வடிவில் சொல்லும்போது அவை எவ்வளவு எளிதாக மக்களைச் சென்றடைகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்..

படத்தின் காப்புரிமை Facebook/Chennaites

இம்மாதிரியாக மீம்களுக்கு நல்ல வரவேற்புள்ளதால் `மீம் இஞ்சினியர்` என்ற பணியை உருவாக்கி அதற்கு விண்ணப்பிக்க விளம்பரம் கொடுத்துள்ளனர் `தி சைட் மீடியா` நிறுவனத்தினர்.

அந்த விண்ணப்பத்திற்கு தாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஒரு வாரத்திற்குள் சுமார் 400-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததாகவும் அதன்மூலம் மீம்களை உருவாக்குபவர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வேகத்தை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார் லோகேஷ்.

விண்ணப்பித்தவர்களில் பலர் கா்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். அதில் அவர்களுக்கு மன அழுத்தம் உள்ளதாகவும், மீம் உருவாக்குவதுதான் தங்களுக்கு பிடித்துள்ளது என்றும் அவர்கள் கூறுவதாக லோகேஷ் தெரிவித்தார்.

`மீம் மாரத்தான்`

அதிக வரவேற்பை உணர்ந்த லோகேஷிற்கு `மீம் மாரத்தான்` என்ற யோசனை உதித்துள்ளது.

அதாவது இரண்டு மணி நேரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீம் உருவாக்குபவர்கள் கலந்து கொண்டு மீம்களை உருவாக்குவது என்பதுதான் அந்த முயற்சி. முதல்முறையாக மீம்களுக்கான மாரத்தானாக இது இருக்கும் எனவும் கூறுகிறார் லோகேஷ்.

மீம் உருவாக்குதல் ஒரு தொழில்முறையாக்கப்பட வேண்டும் என்றும் மீம் உருவாக்குபவர்கள் அங்கீரிக்கப்பட வேண்டும் என்றும் தான் விரும்புவதாக கூறுகிறார் லோகேஷ்.

’தி சைட் மீடியா’ நிறுவனம் நிர்வகிக்கும் பக்கங்களில், சென்னையட்ஸ் என்ற முகநூல் பக்கமும் ஒன்று. இது சென்னையில் வாழும் பலருக்கு பரிச்சயமான ஒரு முகநூல் பக்கமாக இருக்கிறது. இந்த பக்கத்தை சுமார் ஒரு மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். சென்னை தொடர்பான பல செய்திகளை பகிர்ந்து வரும் இந்த பக்கம் சில விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

சென்னை வெள்ளம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு என பல சம்பவங்களில் அதிகப்படியான பரிச்சயம் பெற்ற இந்த சென்னையட்ஸ் பக்கம், தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்ததை விழாவாக சமீபத்தில் கொண்டாடியுள்ளனர்.

’தி சைட் மீடியா’ நிறுவனத்தின் நிதி உதவி மூலம் சென்னயட்ஸ் தற்போது மரம் நடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிளாண்ட்ரஸ்ட்(planterest) என்னும் நிகழ்வை தொடங்கியுள்ளனர்.

ஊடகங்கள் தொழில் நுட்பத்தால் மாறும் அதே நேரத்தில், விளம்பரங்கள் , மாறி வரும் ஊடகங்களிலும் தொடர்கின்றன !

தொடர்புடைய செய்திகள்:

ஐ.ஐ.டி வன்முறை: கேரள முதல்வரை புகழ்ந்து எடப்பாடியை விமர்சித்த நெட்டிசன்கள்

சட்டசபையில் ஸ்டாலின் சட்டை கிழிப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

பிற செய்திகள்

ஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் - 7 முக்கிய தகவல்கள்

மோதியின் இஸ்ரேல் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாவது எதனால்?

தமிழகத்தில் மூன்றாவது நாளாக திரையரங்குகள் மூடல் : புதுவையும் சேர்கிறது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்