மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒடுக்கீடு: தமிழக அரசு உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

படத்தின் காப்புரிமை Getty Images

மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்து "நீட்" தேர்வெழுதிய மாணவர்களுக்குமருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையின்போது 85 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

"நீட்" (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீட்டையும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாட முறைப்படி படித்த மாணவர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீட்டையும் வழங்கி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது.

இதனால் தங்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படி படித்த சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதை கடந்த 4-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி, தமிழக அரசின் உத்தரவு ஒருதலைப்பட்சமாக உள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழக அரசு ஆட்சேபம்

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாஃப்டே, தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி பயில வேண்டும் என்ற அக்கறையுடன்தான் அவர்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.

மேலும், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மீறவில்லை என்று வழக்கறிஞர் சேகர் நாஃப்டே விளக்கினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழக அரசின் ஆணை, மருத்துவ சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இல்லை எனக் கருதுவதால் அதற்கு தடை விதிக்க முடியாது" என்றனர்.

மேலும், "இந்த விவகாரத்தில் மாணவர்கள் முறையிட விரும்பினால், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதையும் படிக்கலாம்:

கத்தார் பிடிவாதம்; எச்சரிக்கும் செளதி கூட்டணி

ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை

இது இஸ்ரேல் மேஜிக்: மணலில் ஒரு மந்திரம்!

சினிமா விமர்சனம்: ஸ்பைடர் மேன் - ஹோம்கமிங்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்