அறிவியல் சார்ந்த துறையா ஜோதிடம் ? பாஜக அரசு முடிவு எழுப்பும் சர்ச்சை

மத்திய மற்றும் சில மாநில பாஜக அரசுகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்டு வரும் பல அறிவிப்புகள், கருத்துக்கள் அறிவியல் கருத்துக்களுக்கு மாறானவையா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நோயாளிகளுக்கு ஆலோசனை கூற அரச மருத்துவமனைகளில் ஜோதிடர்கள் (கோப்புப் படம்)

நோயாளிகளை குணப்படுத்த ஜோதிடர்கள்?

பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளை குணப்படுத்தும் துறையில் நோயாளிகளுக்கும், அவர்களுடன் வருபவர்களுக்கும் மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்க புற நோயாளிகள் துறையில் ஜோதிட பிரிவை தொடங்க மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

மருத்துவமனையில் உள்ள ஜோதிடர்களிடம், நோயாளிகள் ஆலோசனை பெற குறைந்த கட்டணமாக 5 ரூபாய் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் புற நோயாளிகள் துறையில் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் குறி சொல்பவர்கள் நோயாளிகளின் உடல்நலன் குறித்து அறிவுரை வழங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இந்த புதிய புற நோயாளிகள் துறையில் வாரமிருமுறை மற்றும் வார இறுதிகளில் நோயாளிகளுடன் ஜோதிடர் சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பலரும் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ள நிலையில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும், மத்திய பாஜக அரசு சார்பிலும் இது போன்ற பல அறிவிப்புகள் மற்றும் கருத்துக்கள் கடந்த ஆண்டுகளிலும் வெளிவந்துள்ளன.

`புற்றுநோயை குணப்படுத்த வல்லது மாட்டுச்சாணம் மற்றும் மாடுகளின் சிறுநீர்`

கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில், குஜராத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர்பாய் வேகட் பேசுகையில் மாட்டுச்சாணம் மற்றும் மாடுகளின் சிறுநீர் ஆகியவை புற்றுநோய் பிற உயிர்க்கொல்லி நோய்களை குணப்படுத்த வல்லவை என்றும், இவை இந்நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வரும் மருத்துகளை விட சக்தி வாய்ந்தவை என்றும் தெரிவித்தார்.

Image caption பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மாடுகளின் சிறுநீர்

மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிரான தடை குறித்த விவாதத்தில் பேசிய அவர், மாட்டுச் சாணம் மற்றும் மாடுகளின் சிறுநீர் ஆகியவை புற்றுநோயை குணப்படுத்த ஆகச் சிறந்த மருந்து என்று குறிப்பிட்டார். ஆனால்,இது தொடர்பான விரிவான மருத்துவ விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.

மாட்டுச்சாணம் மற்றும் மாடுகளின் சிறுநீர் குறித்து ஆராய 19 பேர் கொண்ட குழு

இந்நிலையில், மத்திய அரசால் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரில் நோய்களை குணப்படுத்த முடியுமா என்றும், மருத்துவத் தன்மைகள் குறித்து விரிவாக ஆராயவும் 19 பேர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனின் தலைமையில் அமைக்கப்பட்டது.

இக்குழு, மாட்டுச்சாணம், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவையுடன் மாட்டு சிறுநீர் கலந்து தயாரிக்கப்படும் 'பஞ்சகாவ்யா' என்றழைக்கப்படும் கலவையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குழுவில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி அமைப்புகளுக்கு நெருங்கிய சிலர் இடம் பெற்றிருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இவை மட்டும்தானா? இன்னமும் உண்டு

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தக தொகுப்பை ஆயுர்வேதா, யோகா மற்றும் சித்தா, யுனானி (ஆயுஷ்) துறை வெளியிட்டது.

Image caption கர்ப்பிணி பெண்களுக்கு ஆயுஷ் துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள்

இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கலந்து கொண்டார்.

ஆயுஷ் துறை வெளியிட்ட புத்தகத்தில், "கர்ப்பிணி பெண்கள் ஆசை, கோபம், பிணைப்பு, வெறுப்பு மற்றும் இச்சை ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"மேலும்,தேநீர் , காபி, சர்க்கரை, மாவு பொருட்கள், கரம் மசாலா, எண்ணையில் வறுத்த உணவுப் பொருட்கள், முட்டை மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். தெய்வீக சிந்தனை இருக்க வேண்டும். இது வயிற்றில் வளரும் கருவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்" உள்ளிட்ட அறிவுரைகள் கூறப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆயுஷ் துறை அமைச்சர் நாயக் கூறுகையில், புத்தகத்தில் உள்ளவை கட்டாயம் அல்ல, அறிவுரைகள்தான் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கிய இந்தியா - எப்படி?

இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த 2014-ஆம் ஆண்டில் தெரிவித்த ஒரு கருத்து அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.

மருத்துவ உலகின் அரிய கண்டுபிடிப்பாகவும் வளர்ச்சியின் வடிவமாகவும் கருதப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் பண்டைய இந்தியா சிறந்து விளங்கி இருக்கக்கூடும் என்று மும்பையில் உள்ள மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய தொடக்க விழாவில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை KEVIN FRAYER

இது குறித்து மேலும் விளக்கிய மோதி, விநாயகர் கதையை புராணத்தில் இருந்து மேற்கோள் காட்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கவில்லையென்றால் தனது தலையை இழந்த விநாயகருக்கு எவ்வாறு ஒரு யானையின் தலையை சிவபெருமான் பொருத்தி இருக்க முடியும்? என்று கேட்டார்.

இதுவே பண்டைய காலத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இந்தியா சிறந்து விளங்கி இருக்கக்கூடும் என்பதற்கு பிரதமர் மோதி அளித்த புராண மேற்கோள் ஆகும். மோதியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களையும், கேலியையும் உண்டாக்கியது.

பிற செய்திகள்:

நேப்கின்னுக்கு ஜி.எஸ்.டி வரி: பெண்கள் சுகாதாரம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு

காபி குடிப்பதால் நீண்ட காலம் வாழ முடியுமா?

மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை சாத்தியமா?

சாம்பியன் பெடரரின் சாதனைப் பயணம் (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்