தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரின் குவாரிக்கு சீல் வைப்பு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம், கல் குவாரி ஆகியவற்றை வருமான வரித்துறை நேற்று முடக்கிய நிலையில், இன்று கல் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை DIPR

கடந்த மார்ச் மாதத்தில் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டபோது, அந்தத் தொகுதியில் கடுமையாக பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் ஏழாம் தேதியன்று, அமைச்சர் விஜய பாஸ்கர், அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகளை நடத்தியது.

சென்னையில் உள்ள அவரது வீடு, இலுப்பையூரில் உள்ள வீடு, திருவேங்கைவாசலில் உள்ள கல் குவாரி, மேட்டுச் சாலையில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின்போது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டதோடு, விஜய பாஸ்கரிடமும் அவரது உறவினர்களிடமும் வருமான வரித்துறை விசாரணைகளை நடத்திவந்தது.

இந்த நிலையில், விஜய பாஸ்கர் மற்றும் அவரது தந்தை சின்னத்தம்பி உள்ளிட்டவர்களின் பெயரில் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கிவைக்கும்படி புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

தொடர்புடைய செய்திகள்:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து — தேர்தல் ஆணையம் கூறும் காரணம் என்ன?

இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம்

இது தொடர்பாக வருமான வரித்துறையோ, பத்திரப் பதிவுத் துறையோ, விஜய பாஸ்கர் தரப்பிலோ இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலையில் திருவேங்கிவாசலில் உள்ள கல் குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலாவை விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

விராலிமலைத் தொகுதியில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற விஜய பாஸ்கர், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துவருகிறார்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமெனக் கோரி, செவ்வாய்க்கிழமையன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை அவர் சந்தித்துக் கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்த நிலையில், அவரது சொத்துகள் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்