தலைமையைத் தேடி தடுமாறுகிறதா அதிமுக?

அதிமுக தலைமை அலுவலகம்

தமிழகத்தில் ஆளும் அதிமுக, பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என்று மாநிலத்தில் அரசியல் விவகாரங்களை உற்று கவனித்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை தாங்குவது என்பதில் தொடங்கிய பனிப்போர் தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டது, புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது என அடுத்தடுத்து பரபரப்பான அரசியல் காட்சிகளை தமிழக அரசியல் சந்தித்து வருகிறது.

அதன் உச்சகட்டமாக, தினகரன் தலைமைக்கு எதிராக பழனிசாமியின் ஆதரவாளர்கள், அண்மையில் வெளிப்படையாகத் திரும்பியது, தினகரனை நீக்கி விட்டு ஒரே அணியாக பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி அணிகளும் பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என தற்போது அதிமுக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த முறை சசிகலாவுக்கு எதிராகத் திரும்பியதும், அவருடன் கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்போது அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தனர்.

கடந்த மாதம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி, பன்னீர்செல்வம் அணியில் இருந்து முதல்வர் பழனிசாமி அணிக்குச் சென்றார். முதன் முதலாக பன்னீர் செல்வம் அணிக்குச் சென்ற எம்.எல்.ஏ.வும் அவர்தான்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அங்கிருந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்- ஓபிஎஸ்

இத்தகைய சூழலில் "தினகரன் கட்சிப் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம்" என்று அதிமுக தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தை அடிப்படையாக வைத்து, தேர்தல் ஆணையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் வெள்ளிக்கிழமை ஒர் மனுவை அளித்துள்ளனர்.

அதில், "தினகரனையும் அதிமுக துணை பொதுச் செயலாளராக அவர் வெளியிட்டுள்ள கட்சி நிர்வாகிகள் பட்டியலையும் ஏற்கக் கூடாது" என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி மட்டும் காலியாகவுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் அதிமுகவின் பலம் 133 ஆக உள்ளது. இதில் பன்னீர்செல்வம் அணியில் தற்போது உள்ள 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆனால், "இணைப்புக்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இன்னும் பரஸ்பரம் தகவல் இல்லை என்று டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாகக் கூறினர்.

இந்நிலையில், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் நடத்தும் முதல்வர் பழனிசாமியின் செயல்பாடு "பச்சை துரோகம்" என்று தினகரனின் தீவிர ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி குற்றம் சாட்டுகிறார்.

தஞ்சாவூரில் உள்ள சசிகலா ஆதரவாளரான அவரது உறவினர் திவாகரன் கூறுகையில், "சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யூ போல அதிமுக உள்ளது. விரைவில் அதை ஜனநாயக முறையில் மீட்டெடுப்போம்" என்றார்.

"அதிமுகவில் மூன்று அணிகளும் பிரிந்து கிடப்பதால் யாருக்கும் நன்மை இல்லை என்றும் மூன்று தரப்பினரும் ஒன்று சேர வேண்டும்" என்றும் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ் வலியுறுத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியான திமுக கொண்டு வருமா என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, "தேவைப்பட்டால் அது பற்றி பரிசீலிப்போம்" என்றார்.

தினகரனின் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வெற்றிவேல் கூறுகையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் "முதலாளி" டெல்லியில்தான் இருக்கிறார். அதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு அந்த முதலாளியை சந்தித்து கணக்கு காட்ட இருவரும் டெல்லிக்கு சென்றுள்ளனர்" என்றார்.

"அதிமுகவில் தற்போது நிலவும் உச்சகட்ட குழப்பங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம்" என்றும் வெற்றிவேல் குற்றம்சாட்டுகிறார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் திட்டவட்டமாக மறுக்கிறார்.

"தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எந்த விதத்திலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நெருக்கடி கொடுக்கவில்லை. மத்திய,மாநில அரசின் மக்கள் திட்டங்கள் மாநிலத்தில் நிறைவேறுவதற்கு பாஜக உதவி மட்டுமே செய்கிறது" என்கிறார் தமிழிசை.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் என மும்முனை போட்டியில் சிக்கியுள்ள "அதிமுக", பலவீனமான பயணத்தை நோக்கி செல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி தமிழகத்தின் பிரபல அரசியல் ஆய்வாளரான மாலன், பிபிசி தமிழிடம் கூறுகையில், "அரசியல் கட்சி என்ற முறையில் அதிமுகவுக்கு வசீகரத் தன்மை மிக்க தலைமை ஆரம்ப காலத்தில் இருந்தது அக்கட்சியின் முக்கிய பலங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அக்கட்சியின் கட்டமைக்கப்பட்ட தொண்டர்கள் மற்றொரு பலமாக இருந்தனர்" என்றார்.

ஆனால், "ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அந்த வசீகரமிக்க தலைமையை அதிமுக இழந்து விட்டது. தொண்டர்களின் பலத்தை இழக்கும் பாதையை நோக்கி அக்கட்சி சென்று கொண்டிருக்கிறது" என்கிறார் மாலன்.

"அதிகாரப் போட்டியில் ஒருவரையொருவர் வெல்வதற்காக அதிமுகவின் மூன்று அணிகளும் பகிரங்கமாக சண்டையிட்டுக் கொள்ளாவிட்டாலும் கூட, தேர்தல் காலங்களில் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள அந்த அணிகள் முயற்சிக்கக் கூடும்.

அத்தகைய சூழல் அந்த கட்சியை மேலும் பலவீனப்படுத்த வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அதிமுக மிகவும் பலவீனமான காலகட்டத்தில் இருப்பதாகக் கருதுகிறேன்" என்கிறார் மாலன்.

தமிழக விவகாரங்களை கூர்ந்து கவனித்து வரும் மற்றொரு அரசியல் ஆய்வாளரான ஞானி, "அதிமுகவை பொருத்தவரை, ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா குடும்பத்தினர்தான் ஏதோ ஒரு வகையில் பொறுப்பு என மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவலாக உள்ளது" என்கிறார்.

"சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்றாமல் மக்களிடம் மீண்டும் போக முடியாது என்பது அதிமுகவின் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகளின் கருத்து.

இந்த விஷயத்தில் பெரும்பான்மை மக்களும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சித் தலைமையும், சசிகலாவின் எதிர்ப்பு அணிகளுக்கு சாதகமாக உள்ளதால் அதில் வலிமையான அணிக்கே அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை கிடைக்க வாய்ப்புள்ளது" என்கிறார் ஞானி.

இந்நிலையில் "வானளாவிய தலைவர்களாக விளங்கிய எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அதிமுகவை வழிநடத்தியது போல, ஒரு "தலைமை" அதிமுகவில் இனி இருக்குமா என்பது சந்தேகமே" என்று பிரபல அரசியல் ஆய்வாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

"அதிமுக என்ற ஒரு கட்சி அழிந்து விடாது; பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ, சசிகலாவோ - இவர்களில் யார் அதிமுகவின் தேர்தல் சின்னத்தையும் கட்சிக் கொடியையும் மீட்கிறார்களோ அவர்கள் வசமே அந்தக் கட்சி இருக்கும் என்பது எனது பார்வை" என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில், வயதில் குறைவாக இருந்தாலும் வேறு ஒரு தலைமை அதிமுகவில் உருப்பெறும். அந்தக் கட்சி ஏதோ ஒரு வடிவில் நீடிக்கும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் அதிமுக தலைமை எது? என்பதில் ஒரு முடிவுக்கு வர இயலாமல் தேர்தல் ஆணையம் உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் திரேந்திர ஓஜா பிபிசி தமிழிடம் கூறுகிறார்.

"அதிமுக தலைமைக்கு உரிமை கோரி சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி ஏற்கெனவே லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களையும் ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் வந்துள்ளன. அவற்றின் உண்மைத்தன்மையை சரிபாக்கவே பல மாதங்கள் ஆகும்" என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Twitter

இத்தகைய சூழலில் மூன்று அணிகளில் இரு அணிகள் ஒன்று சேர்ந்தாலும் கூட, மற்றொரு அணியின் சவாலை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம் அதிமுகவை வழிநடத்தும் தலைமைக்கு ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

"இந்த விவகாரத்தில் கட்சியை காப்பாற்றுவதை விட, மீதமுள்ள நான்கு ஆண்டுகால ஆட்சியை தக்க வைப்பதிலேயே ஆளும் அதிமுகவினரின் கவனம் இருக்கும். அதற்காக அக்கட்சித் தலைவர்கள் அவர்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பர்" என தேசிய அரசியலை கவனிக்கும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பன்னீர்செல்வம் ஒரு கோழை : சுப்பிரமணியன் சுவாமி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்