எடப்பாடி அணியில் எனது ஆதரவு "ஸ்லீப்பர் செல்கள்" உள்ளனர்: டி.டி.வி. தினகரன்

twitter படத்தின் காப்புரிமை Twitter

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டனர் என்றும், அவரது அணியில் தனது ஆதரவு ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் பலர் உள்ளதாகவும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், "தன்னை முதல்வராக்கிய பொதுச் செயலாளரையே கட்சியை விட்டு நீக்க முயலும் நபர் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்களுக்கு அவரால் எப்படி நல்ல முதல்வராக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

"தன்னை முதல்வராக்கியவர் தற்போது சிறையில் இருக்கிறார் என்பது பற்றி மனதில் சிறிதளவு ஈரமின்றி பதவி வெறியால் "முதல்வர்" பதவியில் எடப்பாடி பழனிசாமி ஒட்டிக்கொண்டிருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம்" என்று தினகரன் தெரிவித்தார்.

"கடந்த திங்கட்கிழமையன்று எடப்பாடி தலைமையில் நடந்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மொத்தமுள்ள 135 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 77 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்றும் அந்த அணிக்குள் ஸ்லீப்பர் செல் ஆக எனது ஆதரவு உறுப்பினர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்றும் தினகரன் கூறினார்.

படத்தின் காப்புரிமை AIADMK

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தபோது தங்களுடன் 21 பேர் இருந்தனர்; தோழமைக் கட்சி உறுப்பினர்களும் போகவில்லை; அத்தகைய சூழலில் அங்கே எப்படி 122 பேர் சென்றிருக்க முடியும்? என தினகரன் கேள்வி எழுப்பினார்.

குடியரசு தலைவருடன் நாளை எதிர்கட்சிகள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பதவி விலகினால்தான் தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்குத்தான் இருக்கிறது.

அவர் இல்லாத நேரத்தில் துணை பொதுச் செயலாளருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது. எடப்பாடி தரப்பு கூட்டும் பொதுக்குழு செல்லாது என்றும் தினகரன் கூறினார்.

இதற்கிடையே, தினகரனுக்கு ஆதரவாக உள்ள 19 உறுப்பினர்களும் அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே உள்ளதால், தற்போதைய சூழலில் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வது இயலாது என ஆளுநர் தெரிவித்ததற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் 12 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நாளை காலை 11 மணியளவில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து முறையிடவுள்ளனர் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் ஆலோசனை

இதற்கிடையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்டவாரியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் நாளை காலை முதல் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தி்ல வெறும் 77 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது மாவட்ட அமைச்சர்களுடன் முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்