ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

ப்ளூவேல்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகச் சொல்லப்படும் ப்ளூ வேல் என்ற இணைய விளையாட்டை பகிரும் நபர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ப்ளூ வேல் விளையாட்டை குழந்தைகள் அணுகுவதை தடுக்க சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி) ஆலோசனை வழங்கவேண்டும் என்றும் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி துறை உடனடியாக தலையிட்டு மாணவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பட்டியிலிட்டு அவற்றை செப்டம்பர் 7-ம் தேதி அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த வாரம் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடியதால் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அந்த மாணவன் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் இணைந்து இந்த விளையாட்டைப் பற்றி பேசிவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உயர்நீதிமன்றம் தாமாக தலையிட்டு அளித்துள்ள இந்த தீர்ப்பில் நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, இணையத்தில் குழந்தைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை என்றும் மாநிலம் முழுவதும் உள்ள இணையவசதி மையங்கள் இந்த விளையாட்டை ஊக்குவிப்பதாக தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

''மிகவும் ஆபத்தான இந்த விளையாட்டில் எளிதில் சிக்கக் கூடியவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதுவரை 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டுமே இதற்கு பலியாகியுள்ளனர் என்பதே அந்த கூற்றை நிரூபிப்பதாக அமைகிறது,'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ப்ளூ வேல் விளையாட்டை நிர்வகிப்பவர்கள், அதனை விளையாடுபவர்களின் இருப்பிடத்தை அறிந்துள்ளனர் என்றும் பங்கேற்பாளர்களை மன ரீதியாக தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தின் ஆணை குறித்து தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் கேட்டபோது, உயர்நீதிமன்றத்தின் ஆணை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றார். ''ப்ளூவேல் விளையாட்டு பகிரப்படுவதை தடுக்கும் முயற்சிகளை ஏற்கனவே எடுத்துவருகிறோம். சிறப்பு கவனம் செலுத்துவோம்,'' என்று தெரிவித்தார்.

சென்னை காவல்துறை ஆணையார் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது சென்னை நகரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் ப்ளூ வேல் விளையாட்டை பகிருபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்