முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; கமல்ஹாசனுக்கு ஜெயக்குமார் பதிலடி

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசு அகல வேண்டும் என்று கமல் ஹாசன் சமூக ஊடகமான ட்விட்டரில் வெளியிட்ட கருத்துக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி ஏ வி பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் பார்கவ் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியானார். இதனை குறிப்பிட்டு கமல் ஹாசன் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதில், செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச்சங்கு வீண் என்றும், டெங்கு மரணங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிந்துள்ள கமல், தமிழக அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள் என்றும், இனி காவலர் நாம்தான், கேள்விக்கான பதிலை பெறாமல் அமையாதீர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கமல் ஹாசன் முன்வைத்த கருத்துக்களை சீற்றத்துடன் விமர்சித்துள்ளார்.

அரசியல் ஒன்றும் சினிமா அல்ல என்று கூறிய அவர், முதல்வர் பதவி பொம்மை அல்ல என்றும், முதல்வராக மக்களின் அங்கீகாரம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கமல் முதலில் எம் எல் ஏ ஆகட்டும் அதன்பிறகு மற்றதை பார்ப்போம் என்றார் அவர்.

அண்மை காலமாக நடிகர் கமல் ஹாசன் எடப்பாடி பழனிச்சாமி அரசை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கமல் ஹாசன் அரசியலில் களம் இறங்கப் போகிறாரா என்ற ஊகங்கள் நிலவி வந்த நிலையில் சில தினங்களுக்குமுன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கமல் ஹாசனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சூழலில், ஆளும் அரசை எதிர்த்து கமல் ஹாசன் பதிவிடும் கருத்துக்கள் அதிகளவில் பிரபலமானாலும், இணைய பயன்பாட்டாளர்களின் கடும் விமர்சனங்களுக்கும் கமல் ஆளாக தவறுவதில்லை.

அந்த வகையில், கமல் ஹாசனுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை ஒன்றை வைத்து வருகிறார்கள்.

பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக ட்விட்டரை விட்டு வெளியே வந்து போராட வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்