வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது: கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் ஜி.எஸ்.டி அமலானதையடுத்து, திரையரங்கு உரிமையாளர்கள் அதை எதிர்த்து திரையரங்குகளை மூடியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரி விதித்திருப்பதை எதிர்த்தும், திரையரங்கு கட்டணங்களைப் புதுப்பிக்கக் கோரியும் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திரைப்படங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கென விதிக்கப்படும் கேளிக்கை வரி 10 சதவீதத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமையன்று கூடிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசு உடனடியாக திரையரங்க கட்டணங்களைப் புதுப்பிக்க வேண்டும், கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை முதல் (அக்டோபர் 6) புதிய திரைப்படங்கள் எதையும் வெளியிடுவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்திய மல்டிப்ளெக்ஸ் அசோஷியேஷனின் உறுப்பினராக இருக்கும் சென்னையைச் சேர்ந்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டும் செவ்வாய்க்கிழமையிலிருந்தே மூடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, "அப்படி அவர்கள் (தயாரிப்பாளர்கள்) முடிவெடுத்திருக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை" என்று கூறினார்.

வரும் வெள்ளிக்கிழமை பொம்மி, உறுதிகொள், விழித்திரு, சோலோ, கடைசி பெஞ்ச் கார்த்தி, களத்தூர் கிராமம் என ஆறு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. திரையரங்குகள் மூடப்படாத நிலையில், புதிய படங்கள் வெளியாகவில்லையென்றால், ஏற்கனவே வெளியாகியிருக்கும் திரைப்படங்கள் மட்டுமே தொடர்ந்து திரையிடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் ஏற்கனவே திரையரங்கக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. முன்பு அதிகபட்ச கட்டணமாக 120 ரூபாய் இருந்த நிலையில், ஜி.எஸ்.டிக்குப் பிறகு அந்தக் கட்டணங்கள் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக கேளிக்கை வரியும் 10 சதவீதம் விதிக்கப்படும் நிலையில், திரையரங்கக் கட்டணங்கள் அதிகரிக்கும் அல்லது திரையரங்கங்களுக்கான வருவாய் குறையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்