திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல்

இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள்.

Image caption திருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல்.

திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்தியாவில் நிலவுகின்றன என்று சொல்லும் ஹைதராபாத்தைச் சேர்ந்த திருநங்கைகள் குழு ஒன்று, இவற்றை மாற்றி உண்மைத் தகவல்களைப் பறிமாறிக்கொள்வதற்காக இந்தச் சேனலைத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.

மூன்று மொழிகளில்...

தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது மொழிகளில் இந்த யூ டியூப் சானல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

திருநங்கைகளின் பிரச்சினைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை இந்த யூடியூப் சானல்கள் தருவதால், இவை அந்தந்த மொழியின் அகரவரிசை எழுத்துகளைக் கொண்ட பெயரில் தொடக்கப்பட்டுள்ளன.

தெலுங்கில் 'அ, ஆ அஞ்சலி', கன்னடத்தில் 'அக்ஷர ஜான்வி', உருதில் 'அலிஃப் சோனியா' என்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன.

ஏற்கெனவே, தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளில் இரண்டு டீசர்கள் வெளியாகியுள்ளன. திருநங்கைகளே எழுதி, இயக்கி அளிக்கும் உள்ளூர் மொழியில் வெளியாகும் திருநங்கைகள் பற்றிய ஒரே யூடியூப் சேனல் இதுதான்.

இச் சேனல்களின் எழுத்தாளரும், இயக்குநருமான ரச்சனா முத்ரபோய்னா இது பற்றிக் கூறுகையில், நான் திருநங்கைகள் பற்றிய பல யூடியூப் சேனல்களைப் பார்த்தேன். அவற்றில் பல தவறான தகவல்களைக் கூறுகிறவையாக இருந்தன. சில சேனல்கள் மூடநம்பிக்கைகளையும் பரப்புகின்றன.

எனவே, திருநங்கைகள் பற்றி சரியான தகவல்களைத் தருவது என் கடமை என்று நான் நினைத்தேன் என்றார்.

கேள்விகளுக்கு பதில்கள்

திருநங்கைகள் எனப்படுகிறவர் யார்? ஏன் அவர்கள் திருநங்கைகளாக இருக்கிறார்கள்? அவர்களோடு நாம் என்ன பேசலாம்? என்ன கேள்விகள் அவர்களை கவலை கொள்ளச்செய்யும்? அவர்களுக்கு என்னவிதமான சட்டப்பாதுகாப்புகள் கிடைக்கின்றன? இந்துமதப் புனித நூல்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுகின்றன? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தங்கள் யூ டியூப் சேனல்களில் கிடைக்கின்றன என்கிறார் ரச்சனா.

Image caption ரச்சனா

இவர் இரண்டு பட்டமேற்படிப்பு படித்துள்ளார், பல அரசு சாரா அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பல அரசு சாரா தொண்டு அமைப்புகளும் திருநங்களைகள் குறித்த அணுகுமுறையில் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதற்கு முன்பு அவர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தின் மேலதிகாரியுடன் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாக அவர் பணியில் இருந்து விலக நேர்ந்தது.

ஆய்வுத் திட்டங்கள், பொது உரைகள் போன்றவற்றின் மூலம் ஈட்டியதைக் கொண்டே தம் வாழ்வை அவர் நடத்திவந்தார்.

திருநங்கைகள் அமைக்கும் குடும்பங்கள் குறித்து தற்போது அவர் ஓர் ஆய்வு செய்துவருகிறார். படித்துக்கொண்டே வேலை செய்வது என்பது ஒரு திருநங்கைக்கு சவால் நிறைந்ததாக உள்ளது என்கிறார் ரச்சனா.

திரைப்பட இயக்குநர் மோசஸ், மனித உரிமை செயற்பாட்டாளர் பாவனா ஆகியோர் இந்த சேனலை இயக்க ரச்சனாவுக்கு உதவுகிறார்கள்.

"ஒவ்வொரு எபிசோடையும் தயாரிக்க ரூ.12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது. இதுவரை எங்கள் பணத்தைக் கொண்டு சமாளித்தோம். நாங்கள் வேலையற்றவர்கள்.

எனவே, தயாரிப்பில் எங்களுக்கு மோசஸ் உதவுகிறார். க்ரவுட் சோர்சிங் முறையில் நிதி திரட்டினோம்".

போதிய பணம் வந்தது...

"மூன்று வாரங்களில் ரூ.4.5 லட்சம் சேர்ந்தது. நாங்கள் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பணம் சேர்ந்துவிட்டது. இப்போது தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன" என்கிறார் ரச்சனா.

உள்ளூர் மொழியில் மட்டுமே இந்த சேனல் ஒளிபரப்புகள் இருக்கும். பிரச்சினைகளை தாய்மொழியில் பேசும்போது வீச்சு அதிகம் என்கிறார் மோசஸ்.

ஹைதராபாத் போன்ற ஒரு நகரில் இரண்டு நாளுக்கு ஒரு முறை திருநங்கைகள் மீதான ஒரு வன்செயல் கவனத்துக்கு வருகிறது என்கிறார்கள் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பினர்.

ஆசிட் வீச்சு, உடைந்த பீர் பாட்டிலால் தாக்குவது, கண்ணில் மிளகாய்ப் பொடி தூவுவது போன்ற வடிவங்களில் இந்த தாக்குதல்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான முறையற்ற நடத்தைக்கான காரணங்கள் தெரிவதில்லை.

ஆனால், திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் எண்ணம்தான் இத்தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறும் ரச்சனா, எனவே சரியான தகவல்களை பரப்புவது நிலைமையை மாற்ற உதவும் என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :