பொருளாதார மந்த நிலையிலும் இந்திய செல்வந்தர்களிடம் செல்வம் குவிவது எப்படி?

நூறு பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள 'ஃபோர்ப்ஸ் இந்தியா', இந்தியப் பொருளாதாரம் பற்றியும் கருத்து கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமருடன் முகேஷ் அம்பானி

இந்திய பொருளாதாரம் சரிவில் இருக்கும் நிலையிலும் செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு நான்கில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் கூறுகிறது.

"பொருளாதார மந்தநிலை நிலவினாலும் இந்தியாவின் பணக்காரர்களிடம் மேலும் அதிக செல்வம் சேர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் பங்குச் சந்தை உயர்வு" என்று ஃபோர்ப்ஸ் இந்தியா வலைதளம் கூறுகிறது.

'பணவிலக்கம் மற்றும் ஜி.எஸ்.டியின் தாக்கம்'

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொண்ட அரசின் பணவிலக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியுமே இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கு முக்கிய காரணங்களாக ஃபோர்ப்ஸ் இந்தியா குறிப்பிடுகிறது.

படத்தின் காப்புரிமை Forbes India Screenshot

"கடந்த நவம்பரில் அரசு மேற்கொண்ட பணவிலக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியின் தாக்கத்தினால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதமாக சரிந்துவிட்டது" என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

"ஆனால், பொருளாதாரம் பாதித்து மந்த கதியில் இருந்தாலும், செல்வந்தர்களின் செல்வம் முன்னெப்போதையும்விட அதிக அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவின் முதல் நூறு இடங்களில் இருக்கும் செல்வந்தர்களின் சொத்துக்களின் மதிப்பு 25 சதவிகிதம் உயர்ந்து 479 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது".

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மோதியின் மூன்றாண்டு கால ஆட்சி, மக்களின் கருத்து என்ன?

முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு ஒரு லட்சம் கோடி உயர்வு

இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி.

"பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையில் கோலோச்சும் முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அளவு அதீத லாபம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. அவரது சொத்து 15.3 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி) அதிகரித்திருக்கிறது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் வலுவாக இருக்கிறார்."

முகேஷ் அம்பானியின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 2.47 லட்சம் கோடி ரூபாய்!

இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் விப்ரோ நிறுவன உரிமையாளர் அஜிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் பாதிதான். அதாவது 19 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 1.2 லட்சம் கோடி) மட்டுமே.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முகேஷ் அம்பானி

பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸின் இந்திய பதிப்பான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் உரிமை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியிடமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஜியோவின் தாக்கம்'

முகேஷ் அம்பானி இப்போது ஆசியாவிலேயே மிகப் பெரிய ஐந்து பணக்காரர்களில் ஒருவராகிவிட்டார். 'ஜியோவின் தாக்கம்' இது என்று ஃபோர்ப்ஸ் இந்தியா கூறுகிறது.

"முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டியுயுள்ளன, ஜியோவின் தாக்கமே இதற்கு காரணம்".

இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார் குமார் பிர்லா. இந்த ஆண்டு அதிக லாபம் அடைந்தவர்களில் ஒருவர் ஐடியா செல்லுலரின் உரிமையாளர் குமார் பிர்லா. அவருடைய நிறுவனம் வோடாஃபோன் இந்தியாவுடன் இணைந்துவிட்டது."

27 செல்வந்தர்களின் சொத்து ஒரு பில்லியன் டாலர்களை விட அதிகமாகியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Forbes India Screenshot

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் கருத்துப்படி, "கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றிருந்த 27 பேர் இந்த ஆண்டு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் சொத்துக்கள் இந்த ஆண்டு ஒரு பில்லியன் அல்லது அதற்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது".

செப்டம்பர் 15ஆம் தேதியின் பங்குச் சந்தை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

100 செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி பிடிக்க, இரண்டாவது இடத்தில் குமார் பிர்லாவும், மூன்றாவது இடத்தில் அஷோக் லேலண்டின் ஹிந்துஜா பந்து, நான்காவது இடத்தில் வோர்ஸெலர் மித்தலின் லஷ்மி மித்தல் மற்றும் ஐந்தாவது இடத்தில் ஷாபூர்ஜி பெல்லஞ்சி குழுமத்தின் பெல்லஞ்சி மிஷ்த்ரியும் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோதியுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் தொழிலதிபர் கெளதம் அதானி இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பெற்றிருக்கிறார்.

முகேஷ் அம்பானியின் சகோதரரும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் முதலாளியுமான அனில் அம்பானி இந்தப் பட்டியலில் 45வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் 20 இடங்களில் இளையவர் பாலகிருஷ்ணா

100 செல்வந்தர்கள் பட்டியலில் பதஞ்சல்லி ஆயுர்வேத் நிறுவனத்தின் ஆசார்ய பாலகிருஷ்ணா 19வது இடத்தை பிடித்துள்ளார். 45 வயதான பால்கிருஷ்ணா முதல் இருபது இடத்தை பிடித்துள்ள செல்வந்தர்களில் வயது குறைவான தொழிலதிபர். அவரது சொத்து மதிப்பு 6.55 பில்லியன் டாலர். ஃபாயர்ஸ்டார் டைமண்டின் உரிமையாளர் நீரவ் மோதியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

வி.பி.எஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் ஷம்ஷீர் வாயாலில், 100 செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் வயது குறைந்தவர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாபா ராம்தேவுடன் ஆசார்ய பால்கிருஷ்ணா

கேரளாவில் பிறந்த ஷம்ஷீர் அபுதாபியில் ரேடியோலஜிஸ்டாக தனது பணியை துவங்கினார். அவரது வி.பி.எஸ் ஹெல்த்கேர், ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பா, ஓமன் மற்றும் இந்தியாவில் செயல்படுகிறது.

இந்திய செல்வந்தர் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் எல்கெம் லெபாரட்ரிஸின் சம்ப்ரதா சிங் 91 வயதான தொழிலதிபர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இண்டியாபுல்ஸ் குழுமத்தின் உரிமையாளர் சமீர் கஹ்லோத்தின் வயது 43.

மணிபால் குழுமத்தின் தலைவர் ரஞ்சன் பாயின் வயது 44.

இந்திய செல்வந்தர் பட்டியலில் எல்கெம் லெபாரட்ரிஸின் சம்ப்ரதா சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்