சுசுகி கார் தொழிற்சாலையை பல மணி நேரம் மூட காரணமான சிறுத்தைப் புலி பிடிப்பட்டது

மாருதி சுசிகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தைப் புலி
Image caption மாருதி சுசிகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தைப் புலி

மாருதி சுசுகி கார் தொழிற்சாலையில் நுழைந்த சிறுத்தைப் புலி ஏறத்தாழ 36 மணி நேரங்களுக்கு பின் பிடிப்பட்டது.

தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள மனேசர் நகரத்தில் உள்ள தொழிற்சாலைக்குள் நுழைந்த சிறுத்தைப் புலியை பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், வனத் துறை ஊழியர்கள் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.

இந்த சிறுத்தைப் புலி முதலில் தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் வியாழக்கிழமை காலை தென்பட்டது. அதன் பின்பு, தொழிற்சாலைக்குள் பல இடங்களில் தென்பட்டிருக்கிறது.

இரவு பணியில் வேலைப்பார்த்தவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். பரந்து விரிந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி உடனே மூடப்பட்டது.

இந்த கார் உற்பத்தி தொழிற்சாலைதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சாலை ஆகும். இங்கு ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேலான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வியாழக்கிழமை வழக்கம் போல பணிக்கு வந்த பகல் நேர ஊழியர்கள், வாசலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே சமயம், தொழிற்சாலைக்குள் 12 வனத்துறை ஊழியர்களும், 50 காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இயந்திர உற்பத்தி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தைப் புலி தென்பட்டது.

Image caption சிறுத்தைப் புலியின் காலடி தடம்

சிறுத்தைப் புலியை ஈர்த்து வெளியே கொண்டு வர மீட்பு பணியினர் இரண்டு ஆடுகளையும், பச்சை மாமிசத்தையும் கொண்டு வந்ததாக பிபிசியிடம் பேசிய உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

அதே சமயம், சிறுத்தைப் புலியை உள்ளிருந்து விரட்ட பட்டாசை சிலர் கொளுத்தி உள்ளே போட்டார்கள் என்று வன பாதுகாவலர் வினோத் குமார் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

சிறுத்தைப் புலி கண்டுப்பிடிக்கப்பட்ட உடன் அதற்கு மயக்கமருந்து செலுத்தி பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யானைகளோடு பேசும் ஆனந்த் ஷின்டே

பிடிப்பட்ட சிறுத்தைப் புலி, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பரிசோதனை முடிந்தவுடன் அது வனப்பகுதியில் விடப்பட்டது என்று டெல்லி குர்கான் புறநகரின் வனத்துறை துணை பாதுகாப்பாளர், ஆர். ஆனந்த் பிபிசியிடம் வெள்ளிக்கிழமை மதியம் தெரிவித்தார்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. விலங்குகளின் வாழ்விடம் சுருங்கியதால், யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைப் புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

இந்தியாவில் ஏறத்தாழ 12,000 - 14,000 சிறுத்தைப் புலிகள் உள்ளன. தோராயமாக நாள் ஒன்றுக்கு ஒரு சிறுத்தைப் புலி கொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு சிறுத்தைப் புலி பெங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைந்தது. அதை பிடிக்கும் முயற்சியில் ஆறு பேர் காயமடைந்தனர். பின்பு, மயக்க மருந்து செலுத்து அந்த சிறுத்தைப் புலியை பிடிக்க 10 மணி நேரத்துக்கும் மேலானது. ஆனால், ஒரு வாரத்திற்கு பின்பு, அது அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்து தப்பியது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :