ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதா?

ராமஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கடலோரக் காவல்படை அதனை மறுக்கிறது.

ரமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஜெஹோவா ஜிரே என்ற மீன்பிடிப் படகில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள ஓலைக்குடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

பிற்பகல் இரண்டே முக்கால் மணியளவில் அவ்வழியாக வந்த இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த கப்பல், தங்கள் படகு மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகிய இரு மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

"அவர்கள் எங்கள் படகை நிறுத்தச் சொன்னார்கள். ஆனால், கடலுக்குள் வலை இருந்ததால், உடனடியாக அதை நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்கள் படகைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார்கள். இதில் எனக்கும் ஜான்சன் என்பவருக்கும் காயம்பட்டது. பிறகு ஒரு ரப்பர் படகின் மூலம் கப்பலில் இருந்து இறங்கி, எங்கள் படகில் ஏறி எங்களைத் தாக்கினார்கள். இந்தி பேசச் சொல்லி வற்புறுத்தினார்கள்" என்கிறார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகக் கூறும் பிச்சை ஆரோக்கியதாஸ்.

தற்போது பிச்சை ஆரோக்கியதாஸும் ஜான்சனும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இந்தியக் கடலோரக் காவல்படை மறுத்துள்ளது.

பாக் நீரிணை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெஹோவா ஜிரே என்ற அந்த மீன் பிடிப் படகு, தமிழகக் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட ''ட்ராலிங்' முறையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுடைய கப்பலைப் பார்த்ததும் அந்தப் படகை அங்கிருந்து விரைந்து தப்பியதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

தாங்கள் பலமுறை எச்சரித்தும் நிற்காததால், தாங்கள் துரத்திச் சென்றதாகவும் அதில் படகும் கடலோரக் காவல்படையின் கப்பலும் மோதியதாகவும் 50 நிமிட துரத்தலுக்குப் பிறகு படகு நிறுத்தப்பட்டதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அந்தப் படகிலிருந்தவர்கள் விசாரணை செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டனர் என்றும் பாக் நீரிணை பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடக்கவில்லையென்றும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மேலும், மீனவர்கள் சொல்வதைப் போல யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றும் தாங்கள் பிடிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மீனவர்கள் அவ்வாறு கூறலாம் என்றும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் காவல்துறை விசாரித்துவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்