ஐதராபாத்தில் இவான்கா டிரம்ப்: பிச்சைக்காரர்களை பிடித்து கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம்!

ஐதராபாத்தில் இவான்கா டிரம்ப்: பிச்சைக்காரர்களை பிடித்து கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம்! படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் 15-ஆம் தேதிக்குப் பின், ஐதராபாத்தை "பிச்சைக்காரர்கள் இல்லா" நகரமாக அறிவிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சியில், அவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்க அங்குள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் பிச்சை எடுக்க இரண்டு மாதத் தடையை அம்மாநகர காவல்துறை ஆணையர் விதித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TS Sudhir
Image caption ஐதராபாத் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள பிச்சை எடுப்பவர்கள்

அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா டிரம்பின் வருகையையடுத்தே இது செயல்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறினாலும், அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.

வழிப்பாட்டுத் தளங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களின் வெளியில் இருந்த பிச்சைக்காரர்களை கடந்த வாரம் காவல்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். ஐதராபாத் மத்திய சிறைக்கு அருகில் உள்ள மறுவாழ்வு மையத்திற்க்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

உலகளாவிய தொழில் முனைப்பு உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக நவம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில் இவான்கா டிரம்ப் ஹைதராபாத் வர உள்ளார்.

இதேபோல அம்மாநிலத்தில், 2000ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் வருகைக்காக பிச்சைக்காரர்கள் கூண்டாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது, "ஐதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லா நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் ஒன்றான சிறைத்துறை, இந்த 500 ரூபாய் சன்மானத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது" என மறுமலர்ச்சி மையத்திற்க்கு தலைமை வகிக்கும் சம்பத் பிபிசியிடம் கூறியுள்ளார்.

எரிபொருள் நிலையங்களில் வேலை செய்ய இப்பிச்சைக்காரர்களுக்கு பயிற்சி அளிக்க சிறைத்துறை திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை TS Sudhir
Image caption மத்திய சிறை அருகே உள்ள மறுவாழ்வு மையத்துக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

இதுவரை 366 பிச்சைக்காரர்களை பிடித்துள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது. அதில், 128 பேர் மறுமலர்ச்சி மையத்தில் இருக்க தேர்ந்தெடுத்ததாகவும் மற்றும் 238 பேர் வீடு திரும்பி, இனி பிச்சை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாம் நம் நகரத்தை ஸ்மார்ட் நகரம் என்று குறிப்பிடுகிறோம். இருப்பினும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து அளித்து, அவற்றை பெண்களிடம் கொடுத்து அவர்களை பிச்சையெடுக்கச் செய்யும் பிச்சைக்காரர்கள் மாஃபியாவை பெற்றிருக்கிறோம்" என பிச்சைக்காரர்கள் இல்லா சமூகம் அமைக்கப் பணியாற்றும் ஹைதராபாத்தை சார்ந்த அரசு அல்லாத அமைப்பின் டாக்டர் ராமைய்யா பிபிசியிடம் தெரிவித்தார்.

"இங்கு கூட்டிக் கொண்டு வந்த சமயத்தில் தாங்கள் யாரும் பிச்சைக்காரர்கள் அல்ல" என்று அவர்கள் கூறியதாக, பிபிசியிடம் பேசிய தெலுங்கானா சிறைச்சாலையின் இயக்குனர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இராக்-இரான் நிலநடுக்கத்தின் பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)

இனி பிச்சையெடுக்க மாட்டோம் என்று அவர்கள் உத்தரவாதம் அளித்தப் பிறகு, உடல் வலிமையுடைய பிச்சைக்காரர்களை விட்டுவிட்டதாகவும் அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்து வருங்காலத்தில் அவர்களை அடையாளம் கண்டறிய ஆதார் கார்டு வழங்க உள்ளதாகவும் வி.கே சிங் கூறினார்.

இந்த நடவடிக்கைகளால், ஹைதராபாத்தில் இருந்த சுமார் 5000 பிச்சைக்காரர்கள் அருகில் உள்ள வேறு நகரங்களுக்கு வெளியேறி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தடை முடிந்தபின் அவர்கள் மீண்டும் வராமல் இருப்பதை உறுதிப்படுத்துவது தான் இங்கு பெரிய சவாலாக அமையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்